

பிரதமர் நரேந்திர மோடியை கலாய்த்து மீம் வெளியிட்ட ‘ஆல் இந்தியா பக்சோட்’ என்ற சமூக வலைத்தள பொழுதுபோக்கு சேனல் மீது மும்பை போலீஸ் வெள்ளியன்று அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது.
காட்சிப் படுத்தக் கூடாத ‘ஆபாச’ பதிவுகளை எலெக்ட்ரானிக் வடிவத்தில் கொடுத்ததால் ஆல் இந்தியா பக்சோட் என்ற சமூக வலைத்தளத்தின் ட்விட்டர் பக்கம் மீது மும்பை சைபர் குற்றப்பிரிவு அதிகாரிகள் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.
ஸ்னாப்சாட் என்ற ஆப் மூலம் தேர்ந்தெடுத்த படங்களை நகைச்சுவை விளைவுக்காக இஷ்டப்படி மாற்ற முடியும். இந்த வகையில் மாற்றப்பட்டு உருவாக்கப்பட்ட மீமில் பிரதமர் மோடி தனது செல்போனை பார்க்குமாறு ஒரு ஃபிரேமிலும் மற்றொரு ஃபிரேமில் மோடியின் முகம் நாயின் முகத்துடன் ஒப்புமைப்படுத்தப்பட்டு வடிவமைக்கப்பட்டதாகவும் சித்தரிக்கப்பட்டது. அதாவது எந்த முகத்தை நாம் மாற்ற நினைக்கிறோமோ அந்த முகத்துடன் நாயின் காதுகள், மூக்கு ஆகியவற்றைச் சேர்க்க முடியும்.
இத்தகைய மீமை ஆல் இந்தியா பக்சோட் தனது ட்விட்டரிலும், இன்ஸ்டகிராமிலும் வெளியிட்ட சில மணி நேரங்களில் அது வைரலானது. இதில் பலர் எரிச்சலடைந்தனர். சிலர் மும்பை போலீஸுக்கும் இதனைத் தெரியப் படுத்தினர். அதாவது மும்பை போலீஸ் அதிகாரபூர்வ ட்விட்டரில் இந்த விஷயத்தைக் கொண்டு சென்றனர்.
இதனையடுத்து இந்தக் குழு மீது சட்ட நடவடிக்கையை சைபர் போலீஸ் மேற்கொண்டுள்ளது.