

டெல்லியில் 48 தனியார் மருத்துவமனை களில் பொது மக்கள் இலவச அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் வசதி தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான செலவு முழுவதையும் மாநில அரசு ஏற்கும் என முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு சார்பில் கடந்த ஆண்டு டிசம்பரில் இலவச மருத்துவ சிகிச்சைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் இரு நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. இதன்படி இலவச சிகிச்சை பெற ஒருவர் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் டெல்லியில் வசித்திருக்க வேண்டும், அவர்களின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால் இவ்விரு நிபந்தனைகளையும் விலக்கி, டெல்லி அரசு கடந்த மார்ச் மாதம் புதிய அறிவிப்பு வெளியிட்டது. இது குறித்து செய்தி கடந்த மார்ச் 3-ல் ‘தி இந்து’ இணையதளத்தில் வெளியாகி இருந்தது. இதில் தற்போது மேலும் சில விதிகளைத் தளர்த்தி கேஜ்ரிவால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதில் அவர், “அரசு மருத்துவமனை களில் சிகிச்சை பெறுவோருக்கு தேவைப் படும் அறுவை சிகிச்சை 30 நாட்களுக் குள் செய்யப்பட வேண்டும். இல்லை எனில் அவர்கள் தனியார் மருத்துவ மனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு அங்கு 14 நாட்களுக்குள் அறுவை சிகிச்சை செய்யப்படும். இதற்கான செலவு முழுவதையும் மாநில அரசு ஏற்கும்” என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக கேஜ்ரிவால் நேற்று முன்தினம் கூறும்போது, “பொதுமக்களின் கல்வி மற்றும் உடல்நலத்தில் எங்கள் அரசு அதிக அக்கறை செலுத்தி வருகிறது. கடந்த ஆண்டு டெல்லி அரசின் பட்ஜெட்டில் 14 சதவீதத் தொகை உடல்நலத்துக்காக ஒதுக்கப்பட்டிருந்தது” என்றார்.
டெல்லியின் பிரபல தனியார் மருத்துவமனைகள் உட்பட மொத்தம் 48 மருத்துவமனைகளில் ஒன்றை பொதுமக்கள் தேர்வு செய்யலாம். எனினும் இதயம், லேப்ராஸ்கோப்பிக், கால்பிளாடர் உள்ளிட்ட 52 வகை அறுவை சிகிச்சைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் ஊடுகதிர் பரிசோதனை களான எம்ஆர்ஐ, சிடி ஸ்கேன் மற்றும் அல்ட்ரா சவுண்ட் சோதனை வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த இலவச பரிசோதனை மற்றும் அறுவை சிகிச் சைக்கு, அரசு மருத்துவமனைகளால் பரிந்துரைக்கப்பட வேண்டும் என்பது மட்டுமே நிபந்தனையாகும். இதன் மருத்துவ சீட்டுகள் மற்றும் டெல்லிவாசி என்பதற்கான ஆதாரத்தை தனியார் மருத்துவமனையில் சமர்ப்பித்தால் போதுமானது. விபத்துகளுக்கான சிகிச்சை மட்டும் அனைவரும் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த விபத்து டெல்லி எல்லைக்குள் நடைபெற்றிருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, டெல்லி அரசால் அறிமுகம் செய்யப்பட்ட தெரு மருத்துவ ஆலோசனை திட்டம் பொதுமக்கள் இடையே பலத்த வரவேற்பை பெற்றது. பிரபல தனியார் மருத்துவர்களும் இப்பணியில் அமர்த்தப்பட்டது இதன் வெற்றிக்கு முக்கிய காரணம் ஆகும்.