

மேற்கு வங்க மாநிலம், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் மதக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போலீஸார் மற்றும் துணை ராணுவப் படையினர் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
ஒரு மதத்தினரின் புனிதத் தலம் குறித்து ஆட்சேபத்துக்குரிய கருத்து முகநூலில் வெளியானதை தொடர்ந்து, வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் படூரியா நகரில் திங்கள்கிழமை இரவு கலவரம் வெடித்தது. இது தொடர்பாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்ட பிறகும், வீடுகள், வாகனங்கள் மீது தாக்குதல், தீவைப்பு உள்ளிட்ட வன்முறைகள் தொடர்கின்றன.
இதையடுத்து வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். இவர்களுக்கு உதவியாக துணை ராணுவப் படையினர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
படூரியா மற்றும் அதை யொட்டிய ஸ்வரூப்நகர், தேகங்கா, பசீர்ஹத் பகுதிகளில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக மாநில அரசு அறிவித்தபோதிலும் இப்பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை ஆங்காங்கே வன்முறை நிகழ்ந்ததாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்பகுதிகளில் நேற்றும் 144 தடை உத்தரவு அமலில் இருந்தது. போலீஸார் மற்றும் துணை ராணுவப் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். கடைகள், சந்தைகள், பள்ளிகள் அடைக்கப்பட்டிருந்தன. சாலைகளில் மக்கள் நடமாட்டம் மற்றும் வாகனப் போக்குவரத்து மிகக்குறைந்த அளவிலேயே இருந்தது.
இப்பகுதிகளுக்கு அரசியல் கட்சியினர் செல்ல வேண்டாம் என முதல்வர் மம்தா பானர்ஜி கேட்டுக்கொண்டபோதிலும் அரசி யல் கட்சியினர் அதை ஏற்க வில்லை.
பாஜக எம்.பி. ரூபா கங்குலி தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் நேற்று படூரியா பகுதிகளுக்கு செல்ல முயன்றனர். இவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி, கொல்கத்தா விமான நிலைய காவல் நிலையத்தில் பிடித்து வைத்து, பின்னர் விடுவித்தனர். முன்னதாக படூரியா செல்ல முயன்ற காங்கிரஸ், இடதுசாரி குழுக்களும் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “படூரியா பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. கட்சிக் குழுக்கள் அங்கு சென்றால் மீண்டும் பிரச்சினை ஏற்பட வாய்ப் புள்ளது. எனவே அங்கு செல்ல எவரும் அனுமதிக்கப்படவில்லை” என்றார்.