

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இதில், பசு பாதுகாவலர்கள் என்ற போர்வையில் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல், காஷ்மீர் பிரச்சினை, சீனா - இந்தியா இடையே ஏற்பட்டுள்ள மோதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இந்த கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு தர வேண்டும் என வேண்டுகோள் விடுப்பதற்காக நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பேசினார்.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் ஆனந்த் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்துக்களில் பெரும்பாலா னோர் பசுவை தாய் போல மதிக் கின்றனர். அதேநேரம் பசு பாது காவலர்கள் என்ற போர்வையில் சிலர் வன்முறையில் ஈடுபடுகின் றனர். அவ்வாறு சட்டத்தை மீறுவோர் மீது மாநில அரசுகள் தயவு காட்டாமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
பசு பாதுகாப்பு தொடர்பான பிரச்சினையில் அரசியல், மதச்சாயம் பூச முனைவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மோடி எச்சரித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த கருத்தொற்றுமை ஏற்பட்டிருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும் என்று மோடி தெரிவித்தார். இருப்பினும் பிரச்சாரத்தின்போது இரு தரப்பிலும் கண்ணியம் காக்கப் பட்டது பற்றி மகிழ்ச்சி தெரிவித்தார். இந்தத் தேர்தலில் அனைத்து உறுப்பினர்களும் வாக்களிப்பதை அந்தந்த கட்சித் தலைமை உறுதி செய்வது அவசியம் என்றும் மோடி குறிப்பிட்டார்.
புது ஊழல் வழக்கில் சிக்கியுள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத்தை சாடிய மோடி, ஊழலுக்கு எதிரான போரில் அவர் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஊழலில் தொடர்புடைய யாரையும் பாதுகாக்கக்கூடாது. இதுபோன்ற புகாரால்தான் கட்சித் தலைவரின் நற்பெயருக்கு கெட்ட பெயர் வருகிறது என்றும் மோடி தெரிவித்தார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த அனைத்து அரசியல் கட்சி உறுப்பினர்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று மோடி கேட்டுக் கொண்டார். இடையூறு இல்லாமல் அவை நடவடிக்கைகள் நடந்தால்தான் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து விவாதிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார். இவ்வாறு ஆனந்த் குமார் தெரிவித்தார்.
அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் குலாம் நபி ஆசாத் (காங்கிரஸ்), சரத் பவார் (தேசியவாத காங்கிரஸ்), சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட்), முலாயம் சிங் (சமாஜ்வாதி) டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்) உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.