

குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவு அறிவிக் கப்பட உள்ளது. இதனால் அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்பது மாலையில் தெரிந்துவிடும்.
இதுகுறித்து மக்களவை செயலாளரும் தேர்தல் அதிகாரியு மான அனூப் மிஸ்ரா கூறும்போது, “குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி வியாழக்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கும். முதலில் நாடாளுமன்றத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.
அதன் பிறகு மாநிலங்களிலி ருந்து பெறப்பட்ட வாக்குப் பெட்டிகள் அகர வரிசைப்படி திறக்கப்பட்டு எண்ணப்படும். 4 மேசைகளில் 8 சுற்றுகளாக வாக்கு எண்ணும் பணி நடைபெறும். மாலை 5 மணி வாக்கில் முடிவு அறிவிக்கப்படும்” என்றார்.
இப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதை யடுத்து கடந்த 17-ம் தேதி இப்பதவிக்கான தேர்தல் நடைபெற்றது.
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் தலா ஒன்று என மொத்தம் 32 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந் தன. இதில் 99 சதவீத வாக்குகள் பதிவாயின.
இதில் பாஜக கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்தும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் மக்களவை முன்னாள் தலைவர் மீரா குமாரும் போட்டியில் உள்ளனர். எனினும் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெறுவார் என தகவல்கள் கூறுகின்றன.