

தொலைக்காட்சி நிறுவனத்தின் அந்நிய முதலீடு தொடர்பான வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு கார்த்தி சிதம்பரத் துக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலை அருகே பூந் தோட்ட சாலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீடு உள்ளது. அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் இதே வீட்டில்தான் வசிக்கிறார். கடந்த ஏப்ரல் 16-ம் தேதி டெல்லி சிபிஐ அதிகாரிகள் சிதம்பரத்தின் வீட்டில் சோதனை நடத்தினர். அதே நேரத்தில் நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் ‘எல்டோரா’ என்ற கட்டிடத்தில் செயல்பட்டு வரும் கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகத் திலும் சோதனை நடத்தப்பட்டது.
மும்பையைச் சேர்ந்த இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோர் நடத்தி வந்த ‘ஐஎன்எக்ஸ் மீடியா’ என்ற தொலைக்காட்சி நிறுவனம், விதிமுறைகளை மீறி ரூ.305 கோடிக்கு தனது பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்றுள்ளது. இதற்கு கார்த்தி சிதம்பரம் உதவி செய்துள்ளார். இதன்மூலம் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனங்கள் பயன் அடைந்துள்ளன என்ற குற்றச்சாட்டின் பேரில் சோதனை நடத்தப்பட்டதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.
கார்த்தி சிதம்பரத்தின் மீது 5 பிரிவுகளில் வழக்கும் பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து அமலாக்கத் துறையும் கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நாளை (21-ம் தேதி) நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.