

டிஐஜி ரூபா இடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் கர்நாடக பாஜக எம்பிக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக (அம்மா) அணி பொதுச்செயலாளர் சசிகலா சிறப்பு சலுகைகளை பெற டிஜிபி சத்தியநாராயண ராவ் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ரூ. 2 கோடி லஞ்சம் கொடுத்ததாக டிஐஜி ரூபா டி. மவுட்கில் புகார் தெரிவித்தார்.
இந்நிலையில் முதல்வர் சித்தராமையா நேற்று முன்தினம் டிஐஜி ரூபாவை பெங்களூரு போக்கு வரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையராக பணியிட மாற்றம் செய்தார். இதே போல டிஜிபி சத்தியநாராயண ராவ், சிறை தலைமை கண்காணிப் பாளர் கிருஷ்ணகுமார் ஆகியோரையும் இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். இதற்கு பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சிகளும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள் ளனர்.
ரூபாவின் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக பாஜக எம்பிக்கள் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஷோபா கரந்தலாஜே, ராமலு உட்பட 10-க்கும் மேற்பட்ட எம்பிக்கள் பங்கேற்றனர்.
அப்போது கர்நாடக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய எம்பிக்கள், கர்நாடகாவில் நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை என குற்றம்சாட்டினர்.
கைதிகள் போராட்டம்
இதனிடையே பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் டிஐஜி ரூபா இடமாற்றத்தை கண்டித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது டிஜிபி சத்தியநாராயண ராவ், கிருஷ்ணகுமார், தற்போதைய கண்காணிப்பாளர் அனிதா ஆகியோரை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது மற்றொரு குழுவைச் சேர்ந்த கைதிகள் ரூபாவுக்கு எதிராக முழக்கம் எழுப்பியதால் கைதிகளுக்கிடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து சிறை அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு, அனைவரையும் சமாதானப்படுத்தினர்.
ரூபாவுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகளை அதிகாரிகள் தாக்கியுள்ளனர். அப்போது அவர்களிடம் வெற்று தாளில் கையெழுத்து பெற்றுள்ளனர். இதையறிந்த கைதிகளின் உறவினர்கள் நேற்று மாலை சிறையை முற்றுகையிட்டு, இதில் உடனடியாக அரசு தலையிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
சிறை முறைகேட்டை அம்பலப்படுத்திய விவகாரத்தில் டிஜிபி மற்றும் முதல்வர் சித்தராமையா ஆகியோரின் எச்சரிக்கையை மீறி டிஐஜி ரூபா ஊடகங்களில் பேசிவந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் பணியிட மாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக ரூபா நேற்று கூறுகையில், ‘அதிகாரிகளை இடமாற்றம் செய்ய அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. அரசின் உத்தரவை மதித்து நடப்பேன். எனக்கு ஆதரவு அளித்த பாஜக தலைவர்களுக்கும், புதுவை மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் நன்றி' என்றார்.