‘தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை’ - ஆந்திர முதல்வர் ராஜிநாமா செய்ய எம்எல்ஏ ரோஜா வலியுறுத்தல்
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உடனடியாக பதவி விலக வேண்டும் என நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், நடிகையுமான ரோஜா வலியுறுத்தியுள்ளார்.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி யின் மாநில மகளிர் அணி தலைவி யும், நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், நடிகையுமான ரோஜா நேற்று திருப்பதியில் செய்தியாளர்களிடம் கூறியது:
தேர்தலுக்கு முன்பு சந்திரபாபு நாயுடு பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சியைப் பிடித்தார். தற் போது 3 ஆண்டு கால ஆட்சி யில் இதில் பல வாக்குறுதிகளை அவர் தொடங்கக்கூட இல்லை. இதனால் இதற்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும்.
தன்னால் கடந்த தேர்தலில் வெற்றி பெற முடியும் என சந்திரபாபு நாயுடு நினைத்திருந்தால் ஏன் நடிகர் பவன் கல்யாணை துணைக்கு அழைத்து வந்தார்? சந்திரபாபு நாயுடுவின் அரசியல் அனுபவத்தை நினைத்து மக்கள் அவருக்கு வாக்களித்தனர். ஆனால் அந்த அனுபவம் மூலம் அவர் மாநிலத்தை கொள்ளை அடித்து வருகிறார்.
ஆந்திராவில் எந்தத் தெருவைப் பார்த்தாலும் மதுபான கடைகள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆண்கள் மதுவிற்கு அடிமையாகி வருகின்றனர். பலரது வாழ்க்கை சீரழிந்து வருகிறது. சந்திரபாபு நாயுடுவின் மகனும் அமைச்சருமான லோகேஷ் எதற்கெடுத்தாலும் சவால் விடுகிறார். அவரைப் பார்த்தால் ஒரு காமெடி நடிகரை பார்ப்பது போல்தான் சிரிப்பு வருகிறது.
விசாகப்பட்டின நில ஊழல், மணல் கொள்ளை, மதுபான கடை களுக்கு வழங்கிய லைசென்ஸ் முறைகேடு போன்றவை குறித்து உடனடியாக சிபிஐ விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும்.
