

ஹரியானா ரயிலில் முஸ்லிம் இளைஞர் ஜுனைத் என்பவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
மஹாராஷ்டிராவின் தூலே மாவட்டத்தில் உள்ள சாக்ரியில் இவர் கைது செய்யப்பட்டார். முதற்கட்ட விசாரணையில் ஜுனைத்தைக் கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டதாக போலீஸ் தரப்பு கூறுகிறது.
குற்றம்சாட்டப்பட்டவர் பெயர் உள்ளிட்ட அடையாளங்களை போலீஸ் வெளியிடவில்லை, இவர் நாளை (ஞாயிறு) பரிதாபாத் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
கடந்த செவ்வாயன்று ஜுனைத் கொலையாளியைப் பற்றிய தகவல் அளிப்பவருக்கு ரூ.2 லட்சம் தொகை அறிவித்திருந்தது ஹரியாணா ரயில்வே போலீஸ்.
கடந்த ஜூன் 23-ம் தேதி ஓக்லா-பல்லப்கார் ரயில்வே நிலையைங்கள் இடையே கும்பல் ஒன்று முஸ்லிம் சகோதரர்களிடையே தகராறு செய்து அவர்களை மதத்தின் பெயரால் கடுமையாக வசை பாடி, கடைசியில் ஜுனைத் கத்தியால் குத்தப்பட்டு மரணமடைந்த கோர சம்பவம் நடந்தது.
இதனையடுத்து போலீஸார் சிலரைக் கைது செய்தாலும் ஜுனைத்தை கத்தியால் குத்தியது யார் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட அந்த நபரை ஹரியாணா ரயில்வே போலீஸ் இன்று (சனி) கைது செய்தது.