

காஷ்மீரில் தீவிரவாதிகளின் திடீர் தாக்குதலில் அமர்நாத் யாத்திரிகர்கள் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அமர்நாத் குகைக் கோயிலில் பனி லிங்கத்தை தரிசிக்க ஆயிரக் கணக்கான பக்தர்கள் யாத்திரை மேற்கொண்டுள்ளனர். யாத் திரையை சீர்குலைக்க தீவிரவாதி கள் தாக்குதல் நடத்த கூடும் என்று ஏற்கெனவே உளவுத் துறையினர் எச்சரித்திருந்தனர். இதையடுத்து அமர்நாத் யாத்திரைக்கு வழக்கத் துக்கு மாறாக கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்நிலையில் காஷ்மீரில் அனந்தநாக் மாவட்டத்தில் பாது காப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் மீது நேற்றிரவு தீவிரவாதிகள் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதுகுறித்து போலீஸ் ஐஜி முனீர் கான் நேற்றிரவு கூறியதாவது:
அனந்தநாக் மாவட்டத்தில் படன்கூ மற்றும் கானாபால் ஆகிய பகுதிகளில் போலீஸார் மீது நேற்று இரவு 8.20 மணிக்கு தீவிரவாதிகள் சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அப்போது அமர்நாத் பனி லிங் கத்தை தரிசித்துவிட்டு சோனா மார்க் பகுதியில் இருந்து திரும்பி கொண்டிருந்த யாத்திரிகர்கள் பேருந்து துரதிருஷ்டவசமாக குறுக்கே சென்றது.
இதில் பேருந்தில் சென்ற யாத்திரிகர்கள் 7 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 5 பேர் பெண்கள். மேலும், 12 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனந்தநாக் மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். போலீ ஸாரின் பதில் தாக்குதலில் தீவிர வாதிகள் தப்பியோடி விட்டனர்.
இவ்வாறு ஐஜி முனீர் கான் கூறினார்.
போலீஸார் கூறும்போது, ‘‘இரவு 7 மணிக்கு மேல் அமர்நாத் யாத்திரிகர்களுடன் எந்த வாகனமும் நெடுஞ்சாலையில் செல்லக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அந்த கட்டுப்பாட்டை பேருந்து ஓட்டுநர் மீறி சென்றுள்ளார்’’ என்று தெரிவித்தனர்.