Last Updated : 21 Jul, 2017 08:05 AM

 

Published : 21 Jul 2017 08:05 AM
Last Updated : 21 Jul 2017 08:05 AM

பாஜக அணி 65 சதவீத வாக்குகள் பெற்று அமோகம்: குடியரசுத் தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்த் வெற்றி - பிரணாப், மோடி, சோனியா உள்ளிட்டோர் வாழ்த்து

குடியரசுத் தலைவர் தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ராம்நாத் கோவிந்த் (71) 65 சதவீத வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நாட்டின் 13-வது குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து 14-வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 17-ம் தேதி நடைபெற்றது.

இதில் பாஜக கூட்டணி சார்பில் பிஹார் மாநில முன்னாள் ஆளுநர் ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் சார்பில் மக்களவை முன்னாள் தலைவர் மீரா குமாரும் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் 99 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பதிவான வாக்குகள் டெல்லியில் நேற்று எண்ணப் பட்டன. தேர்தல் முடிவு மாலையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தேர்தல் அதிகாரி அனூப் மிஸ்ரா கூறும்போது, “குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ராம்நாத் கோவிந்த் 65.65 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு ஆதரவாக 2,930 வாக்குகள் பதிவாகின. இதன் மொத்த மதிப்பு 7 லட்சத்து 2 ஆயிரத்து 44.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட்ட மீரா குமாருக்கு ஆதரவாக 1,844 வாக்குகள் (34.35%) பதிவாகின. இதன் மொத்த மதிப்பு 3 லட்சத்து 67 ஆயிரத்து 314” என்றார்.

இந்தத் தேர்தலில் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றதன் மூலம், நாட்டின் மிக உயரிய குடியரசுத் தலைவர் பதவியை அலங்கரிக்கப் போகும் 2-வது தலித் என்ற பெருமையைப் பெறுகிறார். இதற்கு முன்பு தலித் சமூகத்தைச் சேர்ந்த கே.ஆர்.நாரா யணன் இந்தப் பதவியை வகித்துள்ளார்.

மேலும் பாஜகவைச் சேர்ந்த ஒருவர் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பது இதுவே முதன்முறை ஆகும். உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இவர் வரும் 25-ம் தேதி பொறுப்பேற்றுக் கொள்வார் எனத் தெரிகிறது.

பிரதமர் மோடி வாழ்த்து

தேர்தல் முடிவு வெளியானதும் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்துக்கு வாழ்த்துகள். அவருடைய பதவிக் காலம் சிறப்பாகவும், இனிமை யாகவும் அமைய வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில், “ராம்நாத் கோவிந் துக்கு பல்வேறு கட்சி எம்.பி., எம்எல்ஏக்கள் ஆதரவளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு வாக்களித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி” என பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “அடுத்த குடியரசுத் தலைவராக தேர்ந் தெடுக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்துக்கு வாழ்த்துகள். அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஜனநாயகத்தின் பாதுகாவலர், முப்படைகளின் தளபதி என்ற வகையில் இந்தப் பதவி தனித்துவம் வாய்ந்தது. அவருடன் இணைந்து பணியாற்ற காங்கிரஸ் தயாராக உள்ளது” என்றார்.

இப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ராம்நாத் கோவிந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட்ட மீரா குமார் கூறும்போது, “ராம்நாத் கோவிந்துக்கு வாழ்த்துகள். சவாலான இந்தத் தருணத்தில் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பார் என்று நம்புகிறேன். அதேநேரம் மதச்சார் பின்மை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக் கான எனது போராட்டம் தொடரும். இந்தத் தேர்தலில் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

வாக்கு விவரம்

ராம்நாத் கோவிந்த்

பெற்ற வாக்குகள் 2,930

மொத்த வாக்கு மதிப்பு 7,02,044

வாக்கு சதவீதம் 65.65

மீரா குமார்

பெற்ற வாக்குகள் 1,844

மொத்த வாக்கு மதிப்பு 3,67,314

வாக்கு சதவீதம் 34.35

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x