

உத்தரபிரதேசம் கான்பூர் தேஹத் மாவட்டம், தேராபூர் வட்டம், பராவுன்க் கிராமத்தில் 1945-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி ஏழை விவசாய குடும்பத்தில் ராம்நாத் கோவிந்த் பிறந்தார். தலித் சமூகத்தைச் சேர்ந்த அவர், கான்பூரில் பள்ளிப் படிப்பை நிறைவு செய்தார். அதேநகரில் உள்ள டிஏவி கல்லூரியில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். பின்னர் கான்பூர் சட்டக் கல்லூரியில் பயின்று வழக்கறிஞரானார்.
இளம் வயதில் ஐஏஎஸ் அதிகாரி யாக விரும்பிய அவர், அதற்கான குடிமைப் பணித் தேர்வினை எழுதி னார். மூன்றாவது முயற்சியில் ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற்றார். ஆனால் ரேங்க் பட்டியலில் பின்தங்கியதால் அந்தப் பணியை ஏற்காமல் வழக்கறிஞராக வாழ்க் கையைத் தொடங்கினார். டெல்லி உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் பல ஆண்டுகள் பணியாற்றினார். கடந்த 1980 முதல் 1993 வரை மத்திய அரசின் வழக்கறிஞராகவும் இருந்தார்.
பள்ளிப் பருவம் முதலே பழங் குடியினர், தாழ்த்தப்பட்டோர், பிற் படுத்தப்பட்டோர், சிறுபான்மை யினர் நலனுக்காகப் பாடுபட்டார். வழக்கறிஞராகப் பணியாற்றிய போதும் சமூகத்தில் ஒடுக்கப் பட்டவர்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளித்தார்.
கடந்த 1977-ம் ஆண்டு மத்தியில் அப்போதைய ஜனதா அரசில் அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாயின் தனிச் செயலாளராகப் பணியாற்றினார். இதுதான் அவரது அரசியல் பயணத்தின் தொடக்கம்.
அதன்பிறகு பாஜகவில் இணைந்த அவர், உத்தரபிரதேசத் தின் காதம்பூர் மக்களவைத் தொகுதியில் 1991-ல் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். எனினும் தோல்வியை கண்டு துவளாமல் மக்கள் சேவையில் தீவிரமாக ஈடுபட்டார். கடந்த 1998 முதல் 2002 வரை பாஜகவின் தலித் மோர்ச்சா தலைவராக இருந்தார். கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராகவும் பதவி வகித்தார்.
கடந்த 1994-ம் ஆண்டில் உத்தரபிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு முதல் முறையாக தேர்ந்தெடுக்கப் பட்டார். அடுத்தடுத்து 2 முறை மாநிலங்களவை எம்.பி.யாக பணியாற்றினார். அப்போது எஸ்சி, எஸ்டி நலனுக்கான நாடாளுமன்ற குழுக்களில் உறுப்பினராக இருந்துள்ளார். மாநிலங்களவையின் வீட்டு வசதி குழுவின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
எம்.பி. பதவிக்காலம் நிறைவடைந்த பிறகு 2007-ம் ஆண்டில் உத்தரபிரதேசம் போக்னிபூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டார். இதிலும் தோல்வியைத் தழுவினார். மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்ற பிறகு, 2015 ஆகஸ்டில் பிஹார் ஆளுநராக நியமிக்கப்பட்டார். தற்போது 14-வது குடியரசுத் தலைவராக நாட்டின் முதல் குடிமகனாக அவர் பதவியேற்க உள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவருடன் 20 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட 2 புகைப்படங்களைப் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட் டுள்ளார்.
படத்துடன் பிரதமர் மோடி பதிவிட்டுள்ள விளக்கத்தில், ‘20 ஆண்டுகளுக்கு முன்பும் இப்போதும் உங்களுடன் இருப்பதில் மகிழ்ச்சி’ என்று தெரிவித்துள்ளார்.
அடுத்தடுத்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில், ராம்நாத் கோவிந்த் விவசாயியின் மகன். சாதாரண குடும்ப பின்னணியைக் கொண்டவர். தனது வாழ் நாள் முழுவதும் ஏழைகளுக் காக உழைத்தவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
கான்பூர்
டெல்லி அக்பர் சாலை எண் 10 பங்களா வில் ராம்நாத் கோவிந்த் தற்போது வசிக்கிறார். அந்த வீடு விழாக்கோலம் பூண்டுள்ளது. அங்கு பணியாற்றும் புதுடெல்லி மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் கூறியபோது, பங்களா வளாகம் முழுவதும் பூங்கொத்துகள் குவிந்து வருகின்றன. காலையில் இருந்து பூங்கொத்துகளைச் சேகரித்து அப்புறப்படுத்துவது பெரும் சவாலாக உள்ளது என்று தெரிவித்தனர்.
உத்தரபிரதேசம், கான்பூர் அருகே ராம்நாத் கோவிந்தின் சொந்த ஊரான பராவுன்க் உள்ளது. அந்த கிராமம் முழுவதும் கேளிக்கை கொண்டாட்டம் களைக் கட்டுகிறது. உள்ளூர் கவுன்சிலர் சஞ்சய் கூறியபோது, வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்பே நாங்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடத் தொடங்கிவிட்டோம். எங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர் குடியரசுத் தலைவராகி இருப்பதால் எல்லையில்லா மகிழ்ச்சியில் திளைக்கிறோம் என்றார்.
ராம்நாத் கோவிந்துடன் 5-ம் வகுப்பு வரை படித்த ஜஸ்வந்த் சிங் கூறியபோது, ‘பள்ளிப் பருவத்திலேயே அவர் மிகுந்த கடவுள் பக்தி கொண்டவர்’ என்றார்.
ராம்நாத் படித்த கான்பூர் டிஏவி கல் லூரி முதல்வர் அமித் குமார் கூறிய போது, ‘முன்னாள் பிரதமர் வாஜ்பாய் எங்கள் கல்லூரி மாணவர். தற்போது எங்கள் கல்லூரி மாணவர் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள் ளார். வரும் 2019-ல் நடைபெற உள்ள கல்லூரி நூற்றாண்டு விழாவுக்கு அவரை சிறப்பு விருந்தினராக அழைப்போம்’ என்றார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் 21 எம்.பி.க்கள் உட்பட 77 பேரின் வாக்குகள் செல்லாதவை என தேர்தல் அதிகாரி தெரிவித்தார். செல்லாத வாக்குகளின் மொத்த மதிப்பு 20,942.
மொத்தம் உள்ள 776 எம்.பி.க்களில் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவாக 522 பேரும், மீரா குமாருக்கு ஆதரவாக 225 பேரும் வாக்களித்தனர். மேலும் சில எம்.பி.க்கள் வாக்களிக்கவில்லை எனத் தெரிகிறது.