Published : 18 Jul 2017 09:49 AM
Last Updated : 18 Jul 2017 09:49 AM

ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய வீரர், 9 வயது சிறுமி பலி

ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஓசி) பகுதியில் பாகிஸ்தான் படையினர் நேற்று அத்துமீறி நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் மற்றும் 9 வயது சிறுமி உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர்.

ரஜவுரி செக்டார் மற்றும் பூஞ்ச் மாவட்ட எல்ஓசி பகுதியில் இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் படையினர் நேற்று காலை 7.30 மணியளவில் தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்தியத் தரப்பில் தகுந்த பதிலடி தரப்பட்டது. இருதரப்பு மோதலில் பாகிஸ்தான் வீசிய பீரங்கி குண்டு, இந்திய வீரரின் பாதுகாப்பு அரண் மீது விழுந்து வெடித்தது. இதில் நாயக் முத்தாசர் அகமது (37) என்ற வீரர் படுகாயம் அடைந்தார். அங்கிருந்து மீட்கப்பட்ட இவர், மருத்துவ சிகிச்சை அறையில் உயிரிழந்தார்.

காஷ்மீரின் ட்ரால் பகுதியில் உள்ள டச்சூ என்ற கிராமத்தை சேர்ந்த இவருக்கு ஷாகீனா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இது தொடர்பாக ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “முத்தாசர் அகமது, கடமையுணர்வும் துணிச்சலும் கொண்டவர். அர்ப்பணிப்புடன் பணியாற்றி வந்தார். அவரது தியாகத்துக்கு நாடு எப்போதும் கடன்பட்டிருக்கும்” என்றார்.

பாலகோட், மஞ்சகோட், பரோட்டி ஆகிய பகுதிகளிலும் பாகிஸ்தான் படையினர் நேற்று தாக்குதல் நடத்தினர். இதில் பரோட்டி பகுதியில் சஜீதா கவுசர் என்ற 9 வயது சிறுமி உயிரிழந்தார்.

இதுதவிர மஞ்சகோட் பகுதியில் பொதுமக்களில் இருவரும் இந்திய வீரர் ஒருவரும் காயம் அடைந்தனர். பாகிஸ்தான் தாக்குதல் காரணமாக மஞ்சகோட், பாலகோட் பகுதியில் அனைத்து பள்ளிகளும் நேற்று மூடப்பட்டன. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

23 முறை சண்டை நிறுத்த மீறல்

கடந்த 12-ம் தேதி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 2 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு முன்பு ஜூன் 29-ம் தேதி பாகிஸ்தான் ராணுவம் பீரங்கி குண்டுகளை வீசியதில் 2 இந்திய வீரர்கள் படுகாயம் அடைந்தனர். ஜூன் மாதத்தில் மட்டும் 23 முறை சண்டை நிறுத்தத்தை பாகிஸ்தான் மீறியுள்ளது.- பிடிஐமுத்தாசர் அகமது

‘திருப்பித் தாக்க உரிமை உள்ளது’

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதலில் நேற்று இந்திய வீரரும் 9 வயது சிறுமியும் உயிரிழந்த அடுத்த 3 மணி நேரத்தில் இரு நாடுகளின் ராணுவ செயல்பாடுகளுக்கான தலைமை இயக்குநர்கள் (டிஜிஎம்ஓ) தொலைபேசியில் பேசினர்.

அப்போது, “எல்லையில் சண்டை நிறுத்த உடன்பாட்டை மீறி நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலுக்கும் தகுந்த பதிலடி தரும் உரிமை இந்தியாவுக்கு உள்ளது. எல்ஓசி பகுதியில் அமைதியை பராமரிப்பதில் இந்தியா உண்மையாக நடந்துகொள்ளும். என்றாலும் பாகிஸ்தான் நடவடிக்கையை பொறுத்தே இது அமையும்” என்று பாகிஸ்தான் டிஜிஎம்ஓ-விடம் இந்திய டிஜிஎம்ஓ லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே.பட் கூறினார்.

சுமார் 10 நிமிடம் நீடித்த இந்தப் பேச்சுவார்த்தையில், “எல்லையில் நடைபெறும் மோதல்களுக்கு பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலே தொடக்கமாக உள்ளது. இந்தியா தகுந்த பதிலடி மட்டுமே தருகிறது. ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் பாகிஸ்தான் நிலைக்கு அருகில் இருந்து ஊடுருவ முயற்சிக்கும்போது மட்டுமே இந்தியா தாக்குதலை தொடங்குகிறது” என்றும் இந்திய டிஜிஎம்ஓ கூறினார்.

இந்தத் தகவலை ராணுவ செய்தித் தொடர்பாளர் அமன் ஆனந்த் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x