Last Updated : 23 Jul, 2017 01:50 PM

 

Published : 23 Jul 2017 01:50 PM
Last Updated : 23 Jul 2017 01:50 PM

காஷ்மீரில் வாகனத்தை அனுமதிக்க மறுத்த 7 போலீஸாரை தாக்கிய ராணுவ வீரர்கள் மீது வழக்கு

காஷ்மீரில் 7 போலீஸாரை அடித்து காயப்படுத்தியதாக ராணுவ வீரர்கள் மீது புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து வீரர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

அமர்நாத் யாத்திரை செல்லும் பல்தால் முகாம் பகுதியில் இருந்து, தனியார் வாகனங்களில் ராணுவ வீரர்கள் சிலர் கந்தர்பால் நோக்கி சென்றனர். சோனாமார்க் செக் போஸ்ட்டில் அந்த வாகனங்களை நிறுத்தும்படி போலீஸார் சைகை காட்டி உள்ளனர். ஆனால், வாகனங்கள் நிற்காமல் சென்றுள்ளன. அதனால், குந்த் பகுதியில் உள்ள அடுத்த செக்போஸ்ட்டில் போலீஸாருக்கு தகவல் அளித்து வாகனங்களை நிறுத்த கூறியிருக்கின்றனர்.

அதன்படி குந்த் பகுதி செக் போஸ்ட்டில் அந்த வாகனங்களை போலீஸார் தடுத்து நிறுத்தி உள்ளனர். மேலும், அமர்நாத் யாத்திரை வாகனங்கள் செல்ல வேண்டிய நேரம் ஏற்கெனவே முடிந்து விட்டதால், மேற்கொண்டு பயணத்தை தொடர முடியாது என்று போலீஸார் கூறியுள்ளனர். தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால், அமர்நாத் யாத்திரை வாகனங்கள் எதையும் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் அனுமதிக்க கூடாது என்று கடும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்று ராணுவ வீரர்களிடம் போலீஸார் கூறியுள்ளனர்.

ஆனால், போலீஸார் கூறியதை ஏற்க மறுத்த வீரர்கள், 24 ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் படைப் பிரிவில் உள்ள சக வீரர்களை அழைத்துள்ளனர். அவர்களும் விரைந்து வந்து செக் போஸ்ட்டில் பாதுகாப்பில் இருந்த போலீஸாரை கடுமையாகத் தாக்கி உள்ளனர். அத்துடன் குந்த் போலீஸ் நிலையத்துக்குள் வீரர்கள் புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி உள்ளனர். இதில் போலீஸ் நிலையத்தில் வைத்திருந்த ஆவணங்கள் சேதம் அடைந்துள்ளன.

இந்த தாக்குதலில் உதவி சப் இன்ஸ்பெக்டர் உட்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க் கப்பட்டுள்ளனர். இதையடுத்து 24 ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் படையைச் சேர்ந்த வீரர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையில் தகவல் அறிந்து ராணுவம் மற்றும் போலீஸ் துறைகளைச் சேர்ந்த உயரதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காஷ்மீரில் பாக். தாக்குதல்

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர் ஒருவர் காயம் அடைந்தார்.

இதுகுறித்து ராணுவ உயரதிகாரி நேற்று கூறிய தாவது:

ரஜவுரி மாவட்டம் நவ்ஷெரா பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே நேற்று இரவு பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இரவு 10.35 மணிக்கு பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்த தொடங்கினர். அதற்கு இந்திய தரப்பில் சரியான பதிலடி கொடுக்கப்பட்டது. இருதரப்பு சண்டையில் இந்திய வீரர் ஒருவர் லேசான காயம் அடைந்தார்.

இதேபோல் காஷ்மீரில் சுந்தர்பானி செக்டார் பகுதியில் பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில் உ.பி. சகாரன்பூர் மாவட்டம் தியோபந்த் கிராமத்தைச் சேர்ந்த வீரர் ஜெயத்ரத் சிங் (28) படுகாயம் அடைந்தார். பின்னர் அவர் இறந்தார்.

இவ்வாறு ராணுவ உயரதிகாரி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x