

ஹாம்பர்கில் ஜி20 மாநாட்டுக்கிடையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆகியோர் பல்வேறு இருதரப்பு விவகாரங்களைப் பேசி ஆலோசனை நடத்தியதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
வெள்ளிக்கிழமையன்று தொடங்கிய ஜி20 உச்சி மாநாட்டுக்கிடையில் நடைபெறாது என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
மத்திய வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் கோபால் பாக்லே தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமரும், சீன அதிபர் ஜின்பிங்கும் பலதரப்பட்ட விஷயங்களைப் பேசி உரையாடினர் என்று பதிவிட்டுள்ளார்.
இதே ட்விட்டர் பக்கத்தில் ஜின்பிங்கும் மோடியும் கைகுலுக்கிக் கொள்ளும் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.
சீன அதிகாரி இரு தலைவர்களும் ஜி20 மாநாடுகளுக்கிடையே சந்திப்பதற்கு ஏற்ற சூழல் இல்லை என்று தெரிவித்திருந்தார்.
சிக்கிம் எல்லை விவகாரத்தில் இருநாடுகளும் மாறி மாறி ஒருவரையொருவர் விமர்சனம் செய்வது நடந்து வரும் சூழ்நிலையிலும், நிபுணர்கள் போர்ச்சூழல் பற்றியெல்லாம் பேசத்தொடங்கியுள்ள நிலையிலும் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஜி20 மாநாட்டுக்கிடையே பிரிக்ஸ் நாடுகள் கூட்டத்தை சீன அதிபர் ஜின்பிங் கூட்டினார். அப்போது மோடி, உலக அரசியலில் ஏற்றத்தாழ்வான நிலைமைகளும் பாதுகாப்பு மோசமடைந்து வருவதும் ஒவ்வொரு நாட்டையும் பாதிக்கிறது என்று கவலை வெளியிட்டார்.
“பிரிக்ஸ் நாடுகள் நிலைத்தன்மை, முன்னேற்றம், நிர்வாகம் ஆகியவற்றின் குரலாக உலக மேடையில் ஒலிக்க வேண்டும்” என்றார் பிரதமர் மோடி.
கொரியாவில் உள்ள பதற்றமான சூழ்நிலை குறித்தும் பிரதமர் மோடி தன் கவலைகளை வெளியிட்டார்.
அதாவது வடகொரியா பொறுப்பற்ற முறையில் ஏவுகணைச் சோதனைகளை நடத்தி வருகிறது, இதற்குப் பதிலடியாக ராணுவ நடவடிக்கையைப் பயன்படுத்துவோம் என்று அமெரிக்கா வடகொரியாவை எச்சரித்த பின்னணியில் மோடி இவ்வாறு பேசினார்.
வடகொரியாவை ஆதரிப்பதில் ரஷ்யாவும், சீனாவும் கைகோர்த்துள்ளதாக அமெரிக்கா கடுமையாக சாடியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சந்திப்புக்கு வாய்ப்பில்லை என்று கருதப்பட்ட மோடி-ஜின்பிங் சந்திப்பு நிகழ்ந்துள்ளது எல்லையில் பதற்றத்தைத் தணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.