Last Updated : 14 Jul, 2017 09:33 AM

 

Published : 14 Jul 2017 09:33 AM
Last Updated : 14 Jul 2017 09:33 AM

பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்க அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம்: பெண் டிஐஜி புகார் குறித்து விசாரணை நடத்த முதல்வர் சித்தராமையா உத்தரவு

பெங்களூரு மத்திய‌ சிறையில் அதிமுக (அம்மா) பொதுச்செய லாளர் சசிகலாவுக்கு சிறப்பு சலுகை அளிப்பதற்காக சிறைத்துறை அதிகாரிகள் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றுள்ளதாக கர்நாடக சிறைத் துறை டிஐஜி ரூபா டி மவுட்கில் புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விசாரிக்க முதல்வர் சித்தராமையா நேற்று உத்தர விட்டார்.

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் தலா 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதைய‌டுத்து 3 பேரும் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி முதல் பெங்களூருவில் உள்ள‌ பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சசிகலா சிறை விதிமுறைகளை மீறி சிறப்பு சலுகைகளை பெறுவதாகவும், அதிக பார்வையாளர்களை சந்திப்பதாகவும் புகார் எழுந்தது. இதை கர்நாடக சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயண ராவ் உறுதியாக மறுத்து வந்தார்.

கர்நாடக சிறைத் துறையின் டிஐஜியாக ரூபா டி. மவுட்கில் சமீபத்தில் பொறுப்பேற்றார். இவர் கடந்த இரு வாரங்களாக பரப்பன அக்ரஹாரா சிறையில் திடீர் சோதனை நடத்தி, பல்வேறு குளறுபடிகளை கண்டறிந்தார். இது தொடர்பாக ரூபா நேற்று முன்தினம் மாலை கர்நாடக உள்துறை செயலர், ஊழல் தடுப்புத் துறை இயக்குநர், கர்நாடக காவல் துறை இயக்குநர் ஆர்.கே.தத்தா, சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயணராவ் உள்ளிட்டோருக்கு புகார் கடிதம் அனுப்பினார். 4 பக்கம் கொண்ட இந்த புகார் கடிதம் நேற்று முன்தினம் இரவு கன்னட ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

சிறை டிஐஜி ரூபா டி. மவுட்கில் எழுதியுள்ள கடிதத்தில், “பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை யில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாக எனக்கு புகார்கள் வந்தன. இந்த புகாரை தொடர்ந்து, இருமுறை நேரில் ஆய்வு செய்தேன். அப்போது சிறையில் நடத்திய சோதனையில் பீடி, சிகரெட், பான் மசாலா, மதுபானம், செல்போன் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் கைதிகளிடம் இருப்பது கண்டறியப் பட்டது. சிறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு, போதைப் பொருட்களை விற்பனை செய் கின்றனர். கடந்த 10-ம் தேதி 25 கைதி களிடம் நடத்திய போதை மருந்து பரிசோதனையில் 18 கைதிகள் போதைப் பொருள் பயன்படுத் தியது தெரியவந்தது.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகளும், சலுகைகளும் அளிக்கப்படுகிறது. தனியாக‌ சமையல் அறை அமைக் கப்பட்டு, சிறை ஊழியர்கள் சமை யலர்களாக நியமிக்கப்பட்டுள் ளனர். இத்தகைய சிறப்பு சலுகை, கர்நாடக சிறை விதிமுறைப்படி தவறானது.

சசிகலாவுக்கு சிறப்பு சலுகை வழங்குவதற்காக கர்நாடக சிறைத் துறை டிஜிபி சத்தியநாராயண ராவ் ரூ. 1 கோடி லஞ்சம் பெற்றுள் ளார். சிறையில் உள்ள சிறை கண் காணிப்பாளர், துணை கண்காணிப் பாளர் உள்ளிட்ட மற்ற அதிகாரிகள் ரூ.1 கோடி லஞ்சம் பெற்றுள்ளனர். விவிஐபியை விட கூடுதல் சலுகை களை சசிகலாவுக்கு வழங்கி வருகிறார்கள். இது தொடர்பாக முறையாக விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.

சசிகலாவுக்கு உதவிய‌ சம்பந்தப் பட்ட சிறைத்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலை வருமான ஜெகதீஷ் ஷெட்டர், பாஜக மாநில தலைவர் எடியூரப்பா உள்ளிட்டோர் வலியுறுத்தின‌ர்.

சத்தியநாராயண ராவ் மறுப்பு

பெங்களூருவில் செய்தியாளர் களை சந்தித்த கர்நாடக சிறைத் துறை டிஜிபி சத்தியநாராயண ராவ், “நான் சசிகலாவிடம் லஞ்சம் வாங்கவில்லை. சிறையில் சாதாரண கைதியைப் போலவே சசிகலா நடத்தப்படுகிறார். எந்த விதத்திலும் அவருக்கு சிறப்பு சலுகை வழங்கவில்லை. என் மீது ஊழல் புகார் தெரிவித்த அவர் (ரூபா) மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பேன்” என்றார்.

இதற்கு சிறை டிஐஜி ரூபா டி. மவுட்கில், “என்னிடம் எல்லாவற் றுக்கும் ஆதாரம் இருக்கிறது. எனது கடிதத்தில் தெரிவித்த அனைத் துக்கும் தேவையான ஆதாரங் களை உயர் அதிகாரிகளிடம் அளிக்க தயாராக இருக்கிறேன். கர்நாடக சிறைத்துறை டிஜிபி என்ற முறையில் அவருக்கு (சத்தி யநாராயண ராவ்) நேற்று முன் தினம் மாலை 4:30 மணிக்கு புகார் கடிதம் அனுப்பினேன். நான் எதை யும் சட்டவிரோதமாக செய்ய வில்லை. எனவே எத்தகைய நடவடிக்கைகளையும் சந்திக்க தயாராக இருக்கிறேன்” என்றார்.

கர்நாடக உள்துறையை கவனிக் கும் முதல்வர் சித்தராமையா கூறு கையில், “பெங்களூரு மத்திய சிறையில் நடைபெற்றதாக வெளி யாகியுள்ள தகவல்கள் உடனடி யாக கவனம் செலுத்த வேண்டி யவை. அந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க உயர்நிலை விசாரணை குழு அமைக்க உத்தர விட்டுள்ளேன். இந்த விவகாரத் தில் விசாரணை முடிந்து உண்மை வெளியாகும் வரை அனைவரும் பொறுமை காக்கவேண்டும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

சசிகலாவுக்கு சிக்கல்

சிறை விதிமுறைகளை மீறி அதிக பார்வையாளர்களை சசிகலா சந்தித்தது, தகவல் உரிமை அறியும் சட்டத்தின் மூலம் வெளி யாகி அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. தற்போது உச்ச நீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கின் மறு சீராய்வு மனு விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில் லஞ்ச புகார் எழுந் திருப்பது, அவருக்கு சிக்கலை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x