

குடியரசுத் தலைவர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. ஆளும் பாஜக வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்ட போது, ‘‘ராம்நாத் வலிமையான வேட்பாளர். அவரை எனக்கு நீண்ட நாட்களாகத் தெரியும். தவிர பாஜக.வுக்குப் பெரும்பான்மை பலம் உள்ளது’’ என்று சமாஜ்வாதி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் கூறினார். எனது சகோதரர் என்ன சொல்கிறாரோ அதுதான் இறுதியானது என்று மற்றொரு சமாஜ்வாதி தலைவர் ஷிவ்பால் யாதவும் கூறினார்.
மேலும், வேட்பாளராக ராம் நாத்தை அறிவித்தவுடன் உத்தரபிர தேசத்தில் கடந்த மாதம் 20-ம் தேதி பாஜக சார்பில் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் முலாயம் பங்கேற்றார். ஆனால், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் மற்றும் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி ஆகியோர் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் எதிர்க்கட்சி வேட்பாளர் மீராகுமார், அகிலேஷ் மற்றும் மாயாவதியை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டார். அதன்படி இருவரும் மீராகுமாருக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்தனர். மேலும், தனது ஆதரவு எம்எல்ஏ.க்கள் மீராகுமாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று அகிலேஷ் கேட்டுக் கொண்டார். இதை சமாஜ்வாதி செய்தித் தொடர்பாளர் ராஜேந்திர சவுத்ரியும் உறுதிப்படுத்தினார்.
இதற்கிடையில், ‘‘நான் உட்பட எம்எல்ஏ, எம்.பி.க்கள் பலர் ராம்நாத் கோவிந்த்துக்கு வாக்களிப்போம்’’ என்று வாரணாசியில் ஷிவ்பால் பகிரங்கமாகவே அறிவித்தார். இதனால் சமாஜ்வாதி கட்சியில் முலாயம் அணி, அகிலேஷ் அணி இரு பிரிவாக குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பார்கள் என்று தெரிகிறது.
சமாஜ்வாதி கட்சிக்கு முலாயம் உட்பட மக்களவையில் 5 எம்.பி.க் கள் உள்ளனர். அமர் சிங் (தற்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார்) உட்பட மாநி லங்களவையில் 19 எம்.பி.க்கள் உள்ளனர். உத்தரபிரதேச சட்டப்பேரவையில் 47 எம்எல்ஏ.க் கள் உள்ளனர். இவர்களில் எத்தனை பேர் ராம்நாத்தையும் எத்தனை பேர் மீராகுமாரையும் ஆதரித்து வாக்களிக்கப் போகின் றனர் என்பது தெரியவில்லை.
அகிலேஷ் யாதவ் சட்ட மேலவை உறுப்பினராக இருப்பதால் அவரால் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க முடியாது. ஆனால், மக்களவை எம்.பி.யாக உள்ள அகிலேஷின் மனைவி டிம்பிள் தேர்தலில் வாக்களிப்பார். சமாஜ்வாதி கட்சி எம்.பி., எம்எல்ஏ.க்கள் மாற்றி மாற்றி வாக்களித்தாலும் குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவில் எந்த பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தாது. எனினும், முலாயம் சிங் குடும்பம் மற்றும் சமாஜ்வாதி கட்சிக்குள் பிளவு மற்றும் குழப்பத்தை அதிகரிக்கவே செய்யும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.