

இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ், பாகிஸ்தானில் உளவு வேலைகள் பார்த்ததாகவும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் கூறி அவருக்கு அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. பாகிஸ்தானின் இந்தச் செயலுக்கு, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.
அவருக்கு தூதரக உதவிகள் தொடர்ந்து மறுக்கப்பட்ட நிலையில், தண்டனையை எதிர்த்து நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கு சர்வதேச நீதி மன்றத்தில் 10 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் தீர்ப்பு வரும்வரை குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனையை நிறுத்திவைக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவை மறுவிசாரணை செய்ய வேண்டும் என பாகிஸ்தான் மனுத் தாக்கல் செய்திருந்தது.
இந்நிலையில் தமக்கு விதிக்கப் பட்ட மரண தண்டனையை எதிர்த்து ஜாதவ் மேல்முறையீடு செய்திருந்தார். இதை பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து குல்பூஷன் ஜாதவ் பாகிஸ்தான் அதிபர், அந்நாட்டு ராணுவ தளபதிக்கு கருணை மனு அனுப்பியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இந்திய தரப்பில் ஜாதவுக்கு தூதரக ரீதியிலான உதவிகளை செய்ய அனுமதிக்குமாறு மீண்டும் வலியுறுத்தப்பட்டது. இதற்கு பாகிஸ்தான் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நபீஸ் சகாரியா வெளியிட்ட அறிக்கையில், “ஜாதவின் வழக்கை கடலில் எல்லை தாண்டி பிடிபடும் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருடன் இந்தியா ஒப்பிட்டு பரிகாசம் தேட முயற்சிக்கிறது. ஜாதவைப் பொறுத்தமட்டில் பாகிஸ்தானில் உளவு மற்றும் தீவிரவாதச் செயல்களை அரங்கேற்ற இந்திய உளவுத் துறையால் அனுப்பி வைக்கப்பட்டவர். இருநாடுகளுக்கு இடையிலான தூதரக ஒப்பந்தத்தின்படி பாகிஸ்தான் செயல்பட்டு வருகிறது” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.