Published : 05 Nov 2014 09:49 AM
Last Updated : 05 Nov 2014 09:49 AM

கடைசி நிமிடத்தில் சென்னை கோல்: டிராவில் முடிந்தது கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டம்

சென்னையில் நேற்று நடைபெற்ற இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் அட்லெடிகோ டி கொல்கத்தா - சென்னையின் எப்.சி. அணிகளுக்கு இடையிலான த்ரில் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

கடைசி நிமிடத்தில் (90-வது நிமிடம்) சென்னை அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைக்க, அதில் கோலடித்தார் இலானோ. இதனால் சென்னை சென்னை அணி தோல்வியிலிருந்து தப்ப, மகிழ்ச்சி பெருக்கில் மைதானத்தில் இருந்து வெளியேறினார்கள் ரசிகர்கள். இதுவரை தோல்வியையே சந்திக்காத வலுவான அணியான அட்லெடிகோ 3-வது டிராவை சந்தித்திருக்கிறது. அட்லெடிகோ 12 புள்ளிகளுடனும், சென்னை 10 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதல் இரு இடங்களில் உள்ளன.

இரு அணிகளும் பலம் வாய்ந்தவை என்பதால் ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக சென்ற இந்த ஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் கிரேஸியாவின் கோல் வாய்ப்பை சென்னை கோல் கீப்பர் ஷில்டான் அற்புதமாக முறியடித்தார். 9-வது நிமிடத்தில் சென்னை அணிக்கு கார்னர் கிக் வாய்ப்பு கிடைத்தபோதும், அதற்கு பலன் கிடைக்கவில்லை. இதன்பிறகு 12-வது நிமிடத்தில் வலது புறத்தில் இருந்து சென்னையின் கவுரமங்கி கொடுத்த கிராஸை மவுரிஸ் வெளியில் அடித்து வீணடித்தது ஏமாற்றமாக அமைந்தது.

இதன்பிறகு 27-வது நிமிடத்தில் அட்லெடிகோ வீரர் ஜோப்ரே, சென்னை வீரர் இலானோவை கீழே தள்ள, ஜோப்ரேவை மஞ்சள் அட்டையால் எச்சரித்த நடுவர், சென்னைக்கு ப்ரீ கிக் வாய்ப்பை வழங்கினார். கீழே விழுந்த அதேவேகத்தில் ப்ரீ கிக்கை எடுத்தார் இலானோ. அதனால் அவர் கோலடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அதை வெளியில் அடித்து வீணடித்தார்.

33-வது நிமிடத்தில் அட்லெடிகோ முன்கள வீரர் முகமது ரபி பந்தை கோல் கம்பத்தை நோக்கி விரட்டி சென்றார். அப்போது முன்னேறி வந்த சென்னை கோல் கீப்பர் ஷில்டான் பால், ரபியை கீழே தள்ள, ஷில்டானுக்கு ரெட் கார்டு கொடுத்த நடுவர், அட்லெடிகோவுக்கு பெனால்டி வாய்ப்பை வழங்கினார். இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய அட்லெடிகோ வீரர் லூயிஸ் கிரேஸியா கோலடிக்க, அந்த அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

இதன்பிறகு சென்னை அணி 10 வீரர்களுடன் விளையாடியது. கோல் கீப்பர் ஷில்டானுக்குப் பதிலாக மாற்று கோல் கீப்பர் ஜென்னாரோ களம்புகுந்தார். அதனால் ஸ்டிரைக்கர் மவுரிஸ் வெளியேற்றப்பட்டார்.

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ஜோப்ரே 2-வது முறையாக மஞ்சள் அட்டையால் எச்சரிக்கப் பட்டதால் அது ரெட் கார்டாக கணக்கில் கொள்ளப்பட்டு அவர் போட்டியிலிருந்து வெளியேற் றப்பட்டார். இதனால் 47-வது நிமிடத்தில் இருந்து இரு அணி களும் 10 பேருடன் விளையாடின.

இரு அணிகளின் பின்களமும் வலுவானதாக இருந்த நிலையில் கடைசி வரை போராடிய மென்டோஸா, கடைசி நிமிடத்தில் கோல் கம்பத்தை நோக்கி பந்தை விரட்டி செல்ல, அட்லெடிகோ பின்கள வீரர் கிங்ஷக் பாய்ந்து சென்று மென்டோஸாவை கீழே தள்ளினார்.

அப்போது கிங்ஷக்கை மஞ்சள் அட்டையால் எச்சரித்த நடுவர், சென்னைக்கு பெனால்டி வாய்ப்பை வழங்க, அதில் கோலடித்து போட்டியை டிராவில் முடித்தார் இலானோ.

அதிரவைத்த ஐஸ்வர்யா ராய்

இடைவேளையின்போது அபிஷேக்கும் , ஐஸ்வர்யா ராயும் மைதானத்தில் வலம் வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். அப்போது ரசிகர்களின் கரவொலியிலும், கூச்சலிலும் மைதானமே அதிர்ந்தது.

சென்னை அணியின் உரிமையாளர்களில் ஒருவரான அபிஷேக் பச்சன் நேரு மைதானத்துக்கு காரில் வந்தபோது எழும்பூர் அருகே போக்குவரத்து நெரிசல் இருந்தது. அதனால் கார் மெதுவாக ஊர்ந்தது. அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் அபிஷேக்கை அடையாளம் கண்டுகொண்டு கை காண்பித்தனர். நேரு மைதானத்துக்கு வரும் வரை அபிஷேக்கும் ரசிகர்களை நோக்கி வெற்றி நமது என்பதை உணர்த்துவது போல கையை காண்பித்தார். அதைப் பார்த்த ஏராளமான வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலிலும் முண்டியடித்துக் கொண்டு அபிஷேக்கின் காரை பின் தொடர்ந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x