

ஜிஎஸ்டி அறிமுக நள்ளிரவு நாடாளுமன்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, இந்திய ஜனநாயகத்தின் முதிர்ச்சிக்கு அஞ்சலிதான் ஜிஎஸ்டி வரி திட்டம் என்றார்.
அவர் பேசியதாவது:
இது (ஜிஎஸ்டி) 14 ஆண்டுகால பயணம், கொல்கத்தாவில் தொடங்கியது. ஜிஎஸ்டி முதன் முதலில் 2006-07 நிதியாண்டில் முன்மொழியப்பட்டது. அதிகாரக்குழு 2007-ல் முதல் விவாத அறிக்கையை சமர்ப்பித்தது. ஜிஎஸ்டி அறிமுகம் எனக்கு தனிப்பட்ட முறையில் முக்கியத்துவம் வாய்ந்தது ஏனெனில் நான் இதனை அமல்படுத்துவதற்காக நிதியமைச்சராக இருந்த போது பணியாற்றியுள்ளேன்.
ஜிஎஸ்டி உருவாக்கத்தில் நெருக்கமாக இருந்துள்ளேன். ஜிஎஸ்டி என்பது எப்படியும் அமலாகி விடும் என்பதை நான் அறிவேன். ஜிஎஸ்டி என்பது மத்திய மாநில அரசுகளின் கூட்டமைப்பாகும், இதில் எந்த ஒருவரும் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்க முடியாது.
குறித்த நேரத்தில் வேலையை முடித்து ஜிஎஸ்டி கவுன்சில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பரந்துபட்ட கருத்தொற்றுமையின் விளைவே ஜிஎஸ்டி, இந்திய ஜனநாயக முதிர்ச்சியின் வெற்றியை அறிவிப்பதாகும் ஜிஎஸ்டி. நிறைய வரிகளை உள்ளடக்கி எளிமையான வரி முறை ஜிஎஸ்டியில் அடங்குகிறது. நம் ஏற்றுமதிகளை இன்னும் போட்டி ரீதியாக ஆக்குவதற்கு ஜிஎஸ்டி உதவும். இது நுகர்வோருக்கும் விற்பனையாளர்களுக்கும் வலுவான ஊக்குவிப்பாகும்.