Last Updated : 28 Jul, 2017 09:51 AM

 

Published : 28 Jul 2017 09:51 AM
Last Updated : 28 Jul 2017 09:51 AM

பிஹார் மக்களை ஏமாற்றியதுடன் முதுகிலும் குத்திவிட்டார் நிதிஷ்குமார்: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் - லாலு பிரசாத் தகவல்

‘‘பிஹார் மக்களை ஏமாற்றியதுடன், அவர்களுடைய முதுகிலும் குத்திவிட்டார் நிதிஷ்குமார். ஆளுநரின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்’’ என்று ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் குற்றம் சாட்டினார்.

பிஹார் மாநிலத்தில் துணை முதல்வராக இருந்து லாலு மகன் தேஜஸ்வி மீது ஊழல் புகார் எழுந்தது. ஆனால், அவர் பதவி விலக மாட்டார் என்று ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு திட்டவட்டமாகக் கூறினார். இதனால் அதிருப்தி அடைந்த ஐஜத தலைவர் நிதிஷ்குமார், நேற்றுமுன்தினம் திடீரென தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், பாஜக ஆதரவுடன் நேற்று மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார் நிதிஷ் குமார்.

இந்நிலையில், கால்நடை தீவன ஊழல் வழக்கில், ராஞ்சி நீதிமன்றத்தில் ஆஜராக லாலு பிரசாத் நேற்று வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் லாலு கூறியதாவது:

பாஜக.வுடன் மீண்டும் கூட்டணி வைத்துக்கொள்ளும் முடிவை நிதிஷ்குமார் ஏற்கெனவே எடுத்துவிட்டார். அவர்களுடைய திட்டப்படி என் மீதும் என் குடும்பத்தார் மீதும் பிஹார் பாஜக தலைவர் சுஷில் குமார் மோடி ஊழல் புகார் எழுப்பினார். இப்போது பிஹார் மக்களை ஏமாற்றியதுடன், அவர்களுடைய முதுகிலும் நிதிஷ்குமார் குத்திவிட்டார். ‘மேச் பிக்ஸிங்’ முடிந்துவிட்டது.

ஐஜத மாநிலங்களவை எம்.பி. ஆர்.சி.பி. சிங் ஆலோசனைப்படி நிதிஷ்குமார் செயல்படுகிறார். பாஜக.வுக்கு ஆதரவளித்தால் மத்திய அமைச்சராகலாம் என்று நிதிஷிடம் அவர் கூறியிருக்கிறார். ஆனால், பிஹாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம்தான் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளது. மாநிலத்தில் ஆட்சி அமைக்க எங்களைத்தான் ஆளுநர் முதலில் அழைத்திருக்க வேண்டும். பிஹார் ஆளுநரின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்.

இவ்வாறு லாலு பிரசாத் கூறினார்.

பிஹார் முன்னாள் துணை முதல்வரும் லாலு மகனுமாகிய தேஜஸ்வி நேற்று அடுத்தடுத்து வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘‘பிஹார் மாநில துணை முதல்வராக என்னுடைய பணிகளைப் பார்த்து கூட்டணி கட்சிகளும் பாஜக.வும் கலக்கம் அடைந்துவிட்டன. அதனால் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளில் பாஜக.வும் ஐஜத.வும் ஈடுபட்டுள்ளன’’ என்று கூறியுள்ளார்.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x