

நாட்டின் பிரச்சினைகளுக்கு அறிவியலைப் பயன்படுத்தி தீர்வு காண அரசு முன்னுரிமை அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அறிவியல்துறையின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் நடந்தது. இதில் நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.சரஸ்வத், மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் ஆர்.சிதம்பரம் உட்பட அறிவியல்துறை சம்பந்தப்பட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியிடம் பல்வேறு துறைகளிலும் அறிவியல் ஆராய்ச்சியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அதிகாரிகள் விளக்கினர்.
இக்கூட்டத்தில், அதிகாரிகளிடையே பிரதமர் மோடி பேசியதாவது:
அறிவியல்துறையில் ஆராய்ச்சிகள் அதிகரிக்க வேண்டும். அடிப்படையில் இருந்தே வெற்றிகரமான கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும். இந்தியாவின் வளர்ச்சிக்கும் வளத்திற்கும் அறிவியல் தொழில்நுட்பங்களும் புதிய கண்டுபிடிப்புகளும் இன்றியமையாதவை. அதற்கேற்ப, புதிய கண்டுபிடிப்புகளை விஞ்ஞானிகள் உருவாக்க வேண்டும். நாட்டின் பிரச்சினைகளுக்கு அறிவியலைப் பயன்படுத்தி தீர்வு காண அரசு முன்னுரிமை அளிக்கும்.
விளையாட்டுத்துறையில் திறமையானவர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். அதேபோல, பள்ளி மாணவர்களில் அறிவியல்துறையில் திறமையானவர்களை அடையாளம் காண வேண்டும். அதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும்.
விவசாயத்துறையிலும் எரிசக்தித் துறையிலும் அறிவியலை மேம்படுத்த வேண்டும். புரதம் நிறைந்த பருப்புகள், செறிவூட்டிய உணவுகள், மேம்படுத்தப்பட்ட ஆமணக்கு ஆகியவற்றை உருவாக்கும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.
நாட்டின் சவால்களை எதிர்கொள்ளவும் சாதாரண மனிதனின் வாழ்வை மேம்படுத்துவதற்குமான திறமை நமது விஞ்ஞானிகளுக்கு உள்ளது. நாடு சுதந்திரம் அடைந்து பவள விழா கொண்டாடும் 2022-ம் ஆண்டை இலக்கு வைத்து அறிவியல் சாதனை முயற்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.