

பாதுகாப்பு என்ற பெயரில் சக மனிதர்களைக் கொல்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் ராஜஸ்தான், ஹரியாணா, டெல்லி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறுபான்மையினரைக் குறி வைத்துத் தாக்குதல் நடத்தப்படுகிறது. இதில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த வாரம் ஹரியாணா மாநிலம் பல்லப்கார்க் பகுதியில் ரயிலில் 15 வயது சிறுவன் ஜூனைத் கான் ஒரு கும்பலால் கொல்லப்பட்டான்.
இந்நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தின் நூற்றாண்டு விழா மற்றும் மகாத்மா காந்தியின் குருவான மத் ராஜ்சந்திரஜியின் 150-வது பிறந்த நாள் விழா நேற்று நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
பசு பாதுகாவலர்கள் (கோ பக்தி) என்ற பெயரில் சக மனிதனைக் கொல்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை மகாத்மா காந்தியடிகள் ஏற்றுக்கொள்ள மாட்டார். நாம் அனைவரும் ஒன்றிணைந்து காந்தி கண்ட இந்தியாவின் கனவை நிறைவேற்றுவோம். இதன் மூலம் நமது சுதந்திர போராட்ட தியாகிகளைப் பெருமை கொள்ளச் செய்வோம்.
நாட்டில் எந்த ஒரு தனிநபருக்கு சட்டத்தைக் கையில் எடுக்க உரிமை இல்லை. வன்முறை எந்த ஒரு பிரச் சினைக்கும் தீர்வாக அமையாது. இங்கு வன்முறைக்கு துளியும் இடமில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரதமர் கோபம்
இதேபோல் பசு பாதுகாவலர்கள் என்ற போர்வையில் இதுபோன்ற வன்முறையில் ஈடுபடுவோரை கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடி விமர்சித்திருந்தார். மேலும் இது போன்றவர்களுக்கு மாநிலங்கள் தடை விதிக்கவும் அவர் வலியுறுத்தினார்.
அப்போது அவர் கூறும்போது, ‘பசுப் பாதுகாவலர்கள் என்ற போர்வையில் சிலர் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இது எனக்கு கோபத்தை வரவழைக்கிறது’ எனத் தெரிவித்திருந்தார்.
ராகுல் விமர்சனம்
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பசு பாதுகாவலர்களை எச்சரித் திருப்பது பற்றி கருத்துத் தெரிவித்துள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அதனை விமர்சித்துள்ளார். ‘நீங்கள் கூறும் வார்த்தைகளால் ஒன்றும் நடந்துவிடவில்லை. ஆனால் வன்முறையில் (பசு பாதுகாப்பு போர்வை யில்) ஈடுபடுபவர்கள் அதனைச் செய்துகொண்டு தான் உள்ளனர்’ என ராகுல் கடுமையாகத் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கண்டனம்
‘மகாத்மா காந்தியின் கொள்கைகள் பற்றி தங்களுக்கு தெரியும். இதனை ஞாபகப்படுத்தத் தேவையில்லை. ஆனால் பசுவைப் பாதுகாக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும். இதுபோன்ற கும்பலின் செயலைத் தடுக்க பிரதமர் என்ன மாதிரியான திட்டத்தை வைத்துள்ளார் என்பதை அறிய விரும்புகிறோம்’ என மார்க்சிஸ்ட் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் வரவேற்பு
இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் தேசிய பொதுச் செயலாளர் எஸ் சுதாகர் ரெட்டி வெளியிட்ட அறிக்கையில், ‘பசு பாதுகாவலர்களுக்கு மோடி விடுத்துள்ள எச்சரிக்கை வரவேற்கத்தக்கது. அதே நேரம் சமூக விரோதிகள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகின் றனர். சமூக விரோத செயல்களில் ஈடுபடு வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.
இக்கட்சியின் மூத்த தலைவர் டி ராஜா கூறுகையில், ‘பெரும்பாலும் பாஜக ஆளும் மாநிலங்களில்தான் பசு காவலர்கள் என்ற போர்வையில் வன்முறை நிகழ்த்தப்படுகிறது. எனவே பிரதமர் மோடி இதுதொடர்பாக அந்தந்த மாநிலங்களின் முதல்வர்களுக்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்த வேண்டும்’ என்றார்.