

குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் மீராகுமார் நேற்று ஹைதராபாத்தில் எம்.பி., எம்எல்ஏக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினார்.
முன்னதாக ஹைதராபாத் வந்த மீராகுமாரை, தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், எம்.பி. மற்றும் எம்எல்ஏக்கள் வரவேற்றனர். பின்னர் ஹைதராபாத்தில் உள்ள காந்தி பவன் சென்று எம்.பி., எம்எல்ஏக்களைச் சந்தித்து குடியரசுத் தலைவர் தேர்தலில் தனக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக் கொண்டார்.
அப்போது அவர் பேசும்போது, ‘‘காங்கிரஸ் உள்பட 17 கட்சிகள் எனக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. சபர்மதி ஆசிரமத்தில் இருந்து எனது பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறேன். குடியரசுத் தலைவர் தேர்தலில் எம்.பி., எம்எல்ஏக்கள் கட்சி பாகுபாடு இல்லாமல் மனசாட்சிபடி வாக்களிக்க வேண்டும். தேர்தலில் ஆதரவு அளிக்கும்படி தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவுக்கும் கடிதம் எழுதியுள்ளேன். இந்த தேர்தலில் உங்கள் எல்லோர் ஆதரவுடனும் வெற்றிபெறுவேன்’’ என்றார்.