

ஆங்கில புத்தாண்டான ஜனவரி 1-ம் தேதியே வைகுண்ட ஏகாதசியும் வருவதால், அன்றைய தினம் சிபாரிசு கடிதங்கள் மற்றும் முன்பதிவுகளை ரத்து செய்ய திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் நேற்று திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாச ராஜு தலைமையில் தேவஸ்தான அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் ஜனவரி 1-ம் தேதியே வைகுண்ட ஏகாதசியும் வருவ தால், பக்தர்கள் கூட்டம் அதிக மாக இருக்கும் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.புத்தாண்டு தினத்தில் 19 மணி நேரமும், மறுநாள் துவாதசியன்று 18 மணி நேரமும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
மேலும் 24 மணி நேரமும் போக்குவரத்து வசதி, குடிநீர், உணவு, பாதுகாப்பு போன்ற அனைத்து வசதிகளிலும் எந்தவித குறைபாடும் இன்றி ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென அதிகாரி களுக்கு உத்தரவிடப்பட்டது. மேலும் தடையின்றி லட்டு பிரசாதம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
ஜனவரி 1-ம் தேதி கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், தங்குமிடம், தரிசனம் ஆகியவற்றுக்கு சிபாரிசு கடிதங் களை அனுமதிப்பதில்லை என்றும் முன்பதிவுகளை ரத்து செய்வது என்றும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
உண்டியல் எண்ணும் இடத்தை மாற்ற முடிவு
ஏழுமலையானுக்கு பக்தர்கள் செலுத்தும் காணிக்கையால் உண்டியல் ஒரு நாளைக்கு 6 முதல் 12 முறை நிரம்புகிறது. உண்டியலில் நிரம்பும் பணம் ஒரு நாளுக்கு 2 முறை எண்ணப்பட்டு வந்தது. ஆனால் இப்போது காணிக்கை அதிகரித்துள்ளதால் ஊழியர்கள் பணம் எண்ணுவதற்கு திணறி வருகின்றனர். ரூ.10, ரூ.20, ரூ.50 ஆகிய ரூபாய் நோட்டுகளை உடனடியாகக் கணக்கிட முடியாமல் அவைகளை சில்லறை நாணயங்களுடன் எண்ணுகின்றனர். இதனால் ஒரு நாளைக்கு 5 முதல் 10 மூட்டைகள் வரை நிலுவையில் வைக்க வேண்டி உள்ளது. மேலும் சில்லறை நாணயங்களும் டன் கணக்கில் எண்ணப்படாமல் உள்ளன. கடந்த 20 ஆண்டுகளாக சம்பங்கி பிரகாரத்தில் ‘பரகாமணி’ எனும் பெயரில் உண்டியலில் செலுத்தப்படும் ரூபாய் நோட்டுகள் மட்டும் எண்ணப்பட்டு வருகிறது. இந்த இடம் இப்போது போதுமானதாக இல்லாததால், இதை லட்டு வழங்கும் இடத்துக்கு அருகே மாற்ற தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. தேவைப்பட்டால் லட்டு விநியோக இடத்தை வேறு இடத்துக்கு மாற்றவும் ஆலோசித்து வருகிறது.