எம்.பி., எம்எல்ஏக்கள் வாக்களிக்க ஏற்பாடு: இன்று குடியரசுத் தலைவர் தேர்தல் - 20-ம் தேதி முடிவு வெளியாகும்

எம்.பி., எம்எல்ஏக்கள் வாக்களிக்க ஏற்பாடு: இன்று குடியரசுத் தலைவர் தேர்தல் - 20-ம் தேதி முடிவு வெளியாகும்
Updated on
2 min read

குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. நாடு முழுவதும் எம்.பி., எம்எல்ஏக் கள் வாக்களிக்க உள்ளனர். அதற்கான ஏற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. வாக்கு எண்ணிக்கை 20-ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினமே முடிவு வெளியாக உள்ளது.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. பிரணாப் முகர்ஜி யுடன் சேர்த்து இதுவரை 13 பேர் குடியரசுத் தலைவர் பதவி வகித்துள்ளனர். புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. டெல்லி நாடாளுமன்றத்தில் ஒரு வாக்குச்சாவடி, மாநில சட்டப் பேரவையில் தலா ஒரு வாக்குச் சாவடி என மொத்தம் 32 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தத் தேர்தலில் மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ராம் நாத் கோவிந்த் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் மக்களவை முன்னாள் சபாநாயகர் மீரா குமார் போட்டியிடுகிறார்.

இவர்கள் இருவரும் பல்வேறு மாநிலங்களிலும் சூறாவளி சுற்றுப் பயணம் செய்து அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினர். மாநில கட்சிகளின் ஆதர வுடன் மீரா குமாரை வெற்றி பெறச் செய்ய எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

வாக்குப்பதிவு முடிந்த பிறகு, மாநில தலைநகரங்களில் இருந்து வாக்குப் பெட்டிகள் அனைத்தும் உடனடியாக சீல் வைக்கப்பட்டு டெல்லிக்கு கொண்டு வரப்படும். அதன்பின் டெல்லியில் வரும் 20-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. அன்றைய தினமே புதிய குடியரசுத் தலைவர் யார் என்பது தெரிந்துவிடும்.

இந்தத் தேர்தலில் மக்களவை எம்.பி.க்கள் 543 பேர், மாநிலங் களவை எம்.பி.க்கள் 233 பேர் உட்பட மொத்தம் 776 எம்.பி.க்கள் வாக்களிக்க உள்ளனர். தவிர அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த 4,120 எம்எல்ஏக்களும் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். மொத்த வாக்காளர் எண்ணிக்கை 4,896. மக்களவையின் 2 நியமன உறுப்பினர்கள், மாநிலங்களவை யின் 12 நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாது. மாநிலங்களில் உள்ள மேலவை உறுப்பினர்களும் இந்தத் தேர்தலில் வாக்களிக்க மாட்டார்கள்.

ரகசிய வாக்கெடுப்பு என்பதால், இன்னாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று எந்த கட்சி கொறடா வும் தங்கள் உறுப்பினர்களுக்கு உத்தரவிடக் கூடாது. தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு இதுவரை 5 லட்சத்து 37 ஆயிரத்து 683 வாக்கு மதிப்புகள் உள்ளன. இது பெரும்பான்மைக்கு 12 ஆயிரம் வாக்குகள் குறைவு. எனினும், பிஜு ஜனதா தளம், தெலங்கானா ராஷ்ட்டிர சமிதி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் அதிமுகவின் 2 அணிகளும் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவளிப்பதாகக் கூறியுள்ளன. இதன்மூலம் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெறுவார் என்று பாஜக வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

இந்தத் தேர்தலில் எம்.பி., எம்எல்ஏக்களின் வாக்குகளுக்கு குறிப்பிட்ட மதிப்பு உள்ளது. எம்எல்ஏக்களின் வாக்கு மதிப்பு, மக்கள்தொகை எண்ணிக்கையில் மாநிலத்துக்கு மாநிலம் மாறும். ஆனால் எம்.பி.க்களின் வாக்கு மதிப்பு மாறாது. அவர்களின் வாக்கு மதிப்பு தலா 708. அதன்படி மொத்த வாக்குகளின் மதிப்பு 10 லட்சத்து 98 ஆயிரத்து 903.

இந்தத் தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பயன் படுத்தப்படவில்லை. வாக்குச் சீட் டில்தான் வாக்குகள் அளிக்க வேண் டும். எம்.பி.க்கள் பச்சை நிறத்திலும், எம்எம்ஏக்கள் இளஞ்சிவப்பு நிறத் திலும் உள்ள வாக்குச் சீட்டுகளில் வாக்கு அளிக்க வேண்டும். மேலும், வாக்களிக்க தேர்தல் ஆணையம் தரும் ‘மார்க்கர்’ பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வேறு பேனாவில் வாக்களித்தால் செல் லாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in