மகாராஷ்டிரத்தில் பாஜகவுக்கு பவார் ஆதரவு: எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது சிவசேனா

மகாராஷ்டிரத்தில் பாஜகவுக்கு பவார் ஆதரவு: எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது சிவசேனா
Updated on
1 min read

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அறிவித்துள்ளார். இதையடுத்து சிவசேனா எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது.

மகாராஷ்டிராவில் 25 ஆண்டு களாக கூட்டணிவைத்திருந்த பாஜகவும், சிவசேனாவும் கடந்த சட்டசபைத் தேர்தலில் தனித்தனியே போட்டியிட்டன. தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளது. சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

இந்நிலையில், ஆளுநர் மாளிகையில் நேற்று காலை 11 மணியளவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டசபையின் மூத்த உறுப்பினர் ஜீவா பாண்டு கவிட்டுக்கு தற்காலிக சபாநாயகராக ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

அதன்பின், சட்டசபையின் 3 நாள் சிறப்புக் கூட்டத்தொடர் தொடங்கியது. புதிய உறுப்பினர்கள் அனைவருக்கும் ஜீவா பாண்டு கவிட் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். உறுப்பினர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி இன்றும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இக்குறுகிய கால கூட்டத்தொடரின் கடைசி நாளான 12-ம் தேதி, அவையின் சபாநாயகரை தேர்ந்தெடுக்கும் பணி நடைபெறும், அதைத் தொடர்ந்து பாஜகவைச் சேர்ந்த முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தனது அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கு கோருவார்.

பவார் ஆதரவு

இதற்கிடையே செய்தியாளர் களை நேற்று சந்தித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், “பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறோம். நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றால் முதல்வர் தேவேந்திர பட்னா விஸுக்கு ஆதரவாக வாக்களிப் போம். எங்களின் இந்த நிலைப் பாடு, ஒரு வாக்காளருக்கு உள்ள உரிமையைப் போன்றது. யாருக்கு வாக்களித்தீர்கள், எதற்காக வாக்க ளித்தீர்கள் என்று வாக்காளரிடம் நீங்கள் கேள்வி கேட்க முடியாது.

மாநிலத்தில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பது என்ற முடிவை நாங்கள் எடுத்துள்ளோம். தங்க ளுக்கு ஆதரவு அளிக்குமாறு பாஜக எங்களிடம் கோரவில்லை. இது தொடர்பாக நாங்கள் யாருடனும் ஆலோசனை நடத்தவில்லை” என்று தெரிவித்தார்.

எதிர்க்கட்சி வரிசையில் சிவசேனா

இதையடுத்து சிவசேனா எதிர்க்கட்சியாக செயல்பட முடிவு செய்துள்ளது. அக்கட்சியின் இந்த முடிவு தொடர்பாக மகாராஷ்டிரா சட்டசபை செயலாளர் அனந்த் கலாசேவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், சிவசேனாவைச் சேர்ந்த சட்டசபை உறுப்பினர்களின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

சட்டசபைக் கூட்டத்தில் எதிர்க் கட்சிகளுக்கு ஒதுக்கப் பட்டுள்ள இருக்கைகளில் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் நேற்று அமர்ந்தனர்.

சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் கூறும்போது, “நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவை பாஜக பெற்றுக் கொண்டால், நாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வோம். இது தொடர்பாக வரும் 12-ம் தேதிக்குள் (நாளை) பாஜக இறுதி முடிவை எடுக்க வேண்டும்” என்று தெரிவித் திருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in