Published : 10 Nov 2014 10:18 AM
Last Updated : 10 Nov 2014 10:18 AM

5 மீனவர்கள் விவகாரம்: மோடி - ராஜபக்ச தொலைபேசியில் ஆலோசனை

இலங்கை நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் ராஜபக்சவுடன் தொலைபேசியில் ஆலோசித்துள்ளார். இத்தகவலை, இலங்கை அதிபர் ராஜபக்ச அலுவலக வட்டாரம் தெரிவித்துள்ளது.

ராமேசுவரத்தைச் சேர்ந்த எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத், லாங்லெட் ஆகிய 5 மீனவர்கள் கடந்த 28.11.2011 அன்று மீன் பிடிக்கச் சென்றனர். இலங்கைக்கு போதைப் பொருள் கடத்திச் சென்றதாகக் கூறி அவர்கள் 5 பேரும், இலங்கை மீனவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்குப் பின், தமிழக மீனவர்கள் 5 பேர் உட்பட 8 பேருக்கும் மரண தண்டனை விதித்து அக்.30-ம் தேதி கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழகம் முழுவதும் மீனவர்களும், பல்வேறு அரசியல் கட்சியினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், இலங்கை நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் ராஜபக்சவுடன் தொலைபேசியில் ஆலோசித்ததாக, அதிபர் ராஜபக்ச அலுவலக வட்டாரம் தெரிவித்துள்ளது.

மேலும், இருநாட்டுத் தலைவர்கள் உரையாடலின்போது, தமிழக மீனவர்கள் பிரச்சினை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் இந்திய சிறைக்கு மாற்றப்படலாம் என இலங்கை ஊடகங்கள் சில தெரிவித்தபோதும், இது தொடர்பாக அதிபர் அலுவலக அதிகாரி ஒருவர் 'தி இந்து' விடம் (ஆங்கிலம்) கூறுப்மோது, "இவ்விவகாரத்தில் இலங்கை அரசு இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை" என்றார்.

நேபாளத்தில் இம்மாதம் நடைபெறவுள்ள சார்க் உச்சி மாநாட்டின்போது, இலங்கை அதிபர் ராஜபக்சவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து மீனவர்கள் பிரச்சினை குறித்து ஆலோசிப்பார் எனத் தெரிகிறது.

தமிழக மீனவர்களுக்காக ஆஜராக இந்திய அரசு வழக்கறிஞர் ஒருவரை நியமித்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x