

மார்பு வலி ஏற்பட்டதால் மும்பை ஜேஜே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளி முஸ்தஃபா தொசா புதன் மதியம் 2.30 மணிக்கு மரணமடைந்தார்.
இவர் மாரடைப்பால் மரணமடைந்ததாக மருத்துவமனை டீன் டி.பி.லஹனே தெரிவித்தார்.
1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் முஸ்தஃபா தொசா (60), இரண்டாம் கட்ட விசாரணையில் மற்ற 5 பேருடன் சேர்த்து குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இவர் தாவூத் இப்ராஹிமுக்கு நெருங்கியவர் என்று கருதப்படுகிறது.
இந்நிலையில் இவர் இன்று அதிகாலை 3 மணிக்கு நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு கட்டுப்படுத்த முடியாத உயர் ரத்த அழுத்தம் இருந்ததாகவும் நீரிழிவு மற்றும் நோய்த்தொற்றும் இருந்ததாக டாக்டர் லஹனே தெரிவித்தார்.