டெல்லியில் தமிழக விவசாயிகள் 2-வது நாளாக போராட்டம்

டெல்லியில் தமிழக விவசாயிகள் 2-வது நாளாக போராட்டம்
Updated on
1 min read

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் சார்பில் டெல்லி, ஜந்தர் மந்தரில் கடந்த மார்ச் 14-ம் தேதி தொடங்கி 41 நாட்கள் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை டெல்லி வந்த தமிழக விவசாயிகள் பிரதமர் இல்லம் அமைந்துள்ள லோக் கல்யாண் மார்க் பகுதியில் போராட்டம் நடத்த முயன்றனர். இதனால் போலீஸார் அனைவரையும் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

இந்நிலையில் 2-வது நாளாக டெல்லி, ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடங்கினர். இது குறித்து ‘தி இந்து’விடம் பி.அய்யாகண்ணு கூறும்போது, “கடந்தமுறை எங்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதையும் இரு அரசுகளும் கண்டுகொள்ள வில்லை. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கடன் வசூலுக்காக விவசாயிகள் துன்புறுத்தப்பட மாட்டார்கள் எனவும் புதிதாக கடன் வழங்கப்படும் என்றும் உறுதி அளித்திருந்தார். இதையே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எங்களிடம் கூறியதுடன் விவசாயக் கடனை ரத்து செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மாட்டோம் என்றார்.

ஆனால் கடன்களை வசூலிப்பதற்காக சுமார் 1,000 விவசாயிகள் மீது பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. 10,000 விவசாயிகளின் அடமான நகைகள் ஏலம் விடப்பட்டுள்ளன. உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. எனவே எங்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தால் நாங்கள் மீண்டும் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்” என்றார்.

விவசாயிகள் இந்தமுறை சுமார் 15 மனித மண்டை ஓடுகளுடன் அதன் எலும்புகளையும் கொண்டு வந்துள்ளனர். இவை தங்கள் தோட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட தமிழக விவசாயிகளின் எலும்புகள் என்று கூறுகின்றனர். விவசாயிகள் நேற்று தங்கள் கை, கால்களைச் சங்கிலியால் கட்டிக்கொண்டு போராட்டம் நடத்தினர். மத்திய அரசும் தமிழக அரசும் தங்கள் முன் விவசாயிகள் கோரிக்கைகள் எழுப்பாதவாறு கட்டிவைத்துள்ளதைக் காட்டும் வகையில் இவ்வாறு போராட்டம் நடத்துவதாக விவசாயிகள் கூறினர். நேற்று காலையில் பெய்த அடைமழையிலும் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியுள்ள நிலையில், தமிழக விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து தீவிரமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in