மும்பை குண்டுவெடிப்பு வழக்கு குற்றவாளி: மகாராஷ்டிர பெண்ணை மணக்க அனுமதி கேட்டு அபு சலீம் மனு

மும்பை குண்டுவெடிப்பு வழக்கு குற்றவாளி: மகாராஷ்டிர பெண்ணை மணக்க அனுமதி கேட்டு அபு சலீம் மனு
Updated on
1 min read

மும்பை தாக்குதல் வழக்கின் குற்றவாளி அபு சலீம் மகாராஷ்டிர பெண்ணைத் திருமணம் செய்ய அனுமதி கோரி தடா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 1993-ம் ஆண்டு நிகழ்ந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பில் 257 பேர் பலியாகினர். 713 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட அபு சலீம் கடந்த 2002 செப்டம்பரில் போர்ச்சுகலில் கைது செய்யப்பட்டார். கடந்த 2005 நவம்பரில் அவர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு மும்பை சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீதான வழக்கு மும்பை தடா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அபு சலீம் உட்பட 6 பேர் குற்றவாளிகள் என்று சில நாட்களுக்கு முன்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தண்டனை விவரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் மும்பரா நகரைச் சேர்ந்த 26 வயது பெண்ணைத் திருமணம் செய்ய அனுமதி கோரி தடா நீதிமன்றத்தில் அபு சலீம் நேற்றுமுன்தினம் மனு தாக்கல் செய்துள்ளார். அவருக்கு தற்போது 57 வயதாகிறது.

அபு சலீம் ஏற்கெனவே சமீரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர் மூலம் 2 பிள்ளை கள் உள்ளனர். பின்னர் பாலிவுட் நடிகை மோனிகா பேடியுடன் சேர்ந்து வாழ்ந்தார். போர்ச்சுகலில் அபு சலீமோடு மோனிகாவும் கைது செய்யப்பட்டார்.

கடந்த 2015-ம் ஆண்டில் லக்னோ நீதிமன்றத்தில் அபு சலீமை ஆஜர்படுத்த ரயிலில் அழைத்துச் சென்றபோது, செல்போன் அழைப்பு மூலம் மும்பராவைச் சேர்ந்த பெண்ணை அவர் திருமணம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின. அதே பெண், அபு சலீமை திருமணம் செய்ய அனுமதி கோரி 2015 ஜூனில் தடா நீதிமன்றத்தை அணுகினார்.

அவர் தனது மனுவில், பத்திரிகை செய்திகள் காரணமாக என்னை அபு சலீம் மனைவி என்றே எல்லோரும் அழைக்கின்றனர். இதன்காரணமாக என்னால் வெளியில்கூட செல்ல முடிய வில்லை. தற்கொலை செய்து கொள்ளலாம் என்று தோன்றுகிறது. இந்த அவமானத்தை என்னால் துடைக்க முடியவில்லை. எனவே அபு சலீமையே திருமணம் செய்துகொள்ள துணிச்சலாக முடிவெடுத்துவிட்டேன் என்று குறிப்பிட்டிருந்தார். அந்த மனு இன்னமும் நிலுவையில் உள்ளது.

இந்தப் பின்னணியில் அபு சலீம் தடா நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்திருக்கிறார். அதில், என்னால் பாதிக்கப்பட்ட பெண் சமுதாயத்தில் தலைநிமிர்ந்து வாழ அந்த பெண்ணின் விருப்பத்தை ஏற்று அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

கைதியின் திருமணத்துக்காக ஜாமீன் அல்லது பரோல் அளிக்கலாம் என்று மும்பை உயர் நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளை அபு சலீம் தனது மனுவில் சுட்டிக் காட்டியுள்ளார். இந்த மனு குறித்து பதில் அளிக்குமாறு சிபிஐ-க்கு தடா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in