Last Updated : 21 Jul, 2017 08:43 AM

 

Published : 21 Jul 2017 08:43 AM
Last Updated : 21 Jul 2017 08:43 AM

எல்லைப் பிரச்சினை பற்றி இந்தியா பேச்சு நடத்த சீனாவும் படைகளை வாபஸ் பெற வேண்டும்: மாநிலங்களவையில் சுஷ்மா ஸ்வராஜ் விளக்கம்

‘‘எல்லைப் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை மூலம் சுமூக முடிவு காணலாம். அதற்கு முன்பு சீனா இந்தியா இருதரப்பும் படைகளை முதலில் வாபஸ் பெற வேண்டும்’’ என்று மாநிலங்களவையில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் விளக்கம் அளித்தார்.

இந்தியா சீனா பூடான் ஆகிய நாடுகள் சந்திக்கும் பீடபூமி பகுதியை இந்தியா டோக்லா என்றும் பூடான் டோக்லாம் என்றும் சீனா டோங்லாங் என்றும் அழைக் கின்றன. சிக்கிம் எல்லையில் டோக்லா அமைந்துள்ளது. அந்தப் பகுதியில் சாலை அமைக்க சீனா முயற்சித்தது. இந்தியாவும் பூடானும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் சிக்கிம் எல்லைப் பகுதியில் இந்தியா படைகளைக் குவித்தது. பதிலுக்கு சீனாவும் படைகளைக் குவித்துள்ளது. இதனால் போர் பதற்றம் நிலவுகிறது.

இந்நிலையில், மாநிலங்களவை யில் நேற்று கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்களின் துணை கேள்விகளுக்கு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பதில் அளிக்கையில் கூறியதாவது:

இந்தியா சீனா பூடான் ஆகிய நாடுகளுக்கு இடையே உள்ள டோக்லாம் எல்லைப் பகுதியை சீனா தன்னிச்சையாக மாற்றி அமைக்க முயற்சிக்கிறது. இது இந்தியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விஷயம். இந்த 3 நாடுகளுக்கு இடையில் கடந்த 2012-ம் ஆண்டு எல்லை தொடர்பாக ஒப்பந்தம் மேற்கொள் ளப்பட்டுள்ளது. எல்லைகள் சந்திக்கும் பகுதியை 3 நாடுகளும் ஒன்றிணைந்துதான் முடிவு செய்ய வேண்டும் என்று அப்போது ஒப்புக் கொள்ளப்பட்டது.

அதன்படி இந்தியா சீனா இடையே இன்னும் எல்லை வரையறுக்கப்படவில்லை. இது குறித்து இருதரப்பும் பேச்சு வார்த்தை நடத்தி முடிவெடுக்க வேண்டும். அதேபோல் சீனா பூடான் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். ஆனால், புல்டோசர்கள் உட்பட நவீன கருவி களைப் பயன்படுத்தி எல்லையில் சாலை அமைக்கும் பணியில் சீனா தன்னிச்சையாக ஈடுபட்டது. அதை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது. பூடானும் சீனாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது.

இந்தப் பிரச்சினையில் இந்தியா தேவையில்லாமல் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தியாவின் நடவடிக்கைக்கு உலக நாடுகள் ஆதரவு அளித்துள்ளன.

எல்லைப் பிரச்சினை குறித்து பேச்சுவார்தை மூலம் சுமூக முடிவு காணலாம். அதற்கு முன்னர் சீனா இந்தியா இருதரப்பும் தங்களது படைகளை வாபஸ் பெற வேண்டும்.

இவ்வாறு சுஷ்மா ஸ்வராஜ் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x