2000–2012 வரை போலி என்கவுன்ட்டர்: மணிப்பூரில் 1,528 பேர் படுகொலையா? சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

2000–2012 வரை போலி என்கவுன்ட்டர்: மணிப்பூரில் 1,528 பேர் படுகொலையா? சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

‘ சட்டபூர்வ அங்கீகாரம் இல்லாமல் என்கவுன்ட்டர் நடத்தி மணிப்பூரில் ராணுவத்தினர் படுகொலைகள் செய்துள்ளனர்’ என்று எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த சிபிஐ.க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மணிப்பூரில் மாவோயிஸ்ட்கள் உட்பட பல்வேறு தீவிரவாத அமைப்பினர் வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ராணுவம், அசாம் ரைபிள்ஸ் மற்றும் மணிப்பூர் போலீஸார் இணைந்து தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், ‘‘தீவிரவாதிகள் அல்லாதவர்களையும் ராணுவத்தினர் மற்றும் போலீஸார் சட்டவிரோதமாக சுட்டுக் கொன்றுள்ளனர். கடந்த 2000-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை என்கவுன்ட்டர் என்ற போர்வையில் 1,528 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும்’’ என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.பி.லோகுர், யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. பின்னர் சட்டவிரோதமாக ராணுவத்தினர் படுகொலைகள் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து தீவிர விசாரணை நடத்திட அதிகாரிகள் குழுவை உடனடியாக அமைக்கும்படி சிபிஐ இயக்குநருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த குற்றச்சாட்டு குறித்து உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 20-ம் தேதி ராணுவம் தரப்பில் கூறும்போது, ‘‘ தீவிரவாதத்தால் கலவர பகுதிகளாக திகழும் காஷ்மீர், மணிப்பூர் போன்ற மாநிலங்களில் ராணுவம் எடுக்கும் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக வழக்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது. நீதிவிசாரணை நடத்தும்போது உள்ளூர் ஆட்களுக்கு சாதகமாக முடிவு வருகிறது. இதனால் ராணுவம் மீதான நன்மதிப்பு குலைகிறது’’ என்று தெரிவித்தது.

இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அளித்த பதிலில், ‘‘ராணுவம் எடுக்கும் நடவடிக்கை ஒவ்வொன்றிலும் ராணுவம் மீது நம்பிக்கை வைக்காமல் இருக்கக்கூடாது. எந்த ஒரு நீதி விசாரணையும் ராணுவத்துக்கு எதிராக இருக்க கூடாது. மணிப்பூரில் சட்டவிரோதமாக படுகொலைகள் செய்ததாகக் கூறுவது தவறு. அவை படுகொலைகள் அல்ல. தீவிரவாதத்தைத் தடுப்பதற்கான ராணுவ நடவடிக்கை’’ என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in