

ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பிலான சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் மகளும், எம்பியுமான மிசா பாரதி அமலாக்கத்துறை முன்பு நேற்று ஆஜரானார்.
டெல்லியில் உள்ள 3 பண்ணை வீடுகளிலும் மிசா பாரதி சைலேஷ் குமார் தம்பதியர் இயக்குநர்களாக பதவி வகிக்கும் மிஷாலி பேக்கர்ஸ் அண்ட் பிரிண்டர்ஸ் நிறுவனத்திலும் கடந்த 8-ம் தேதி அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. போலி நிறுவனங்கள் தொடர்புடைய சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சோதனையில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதன் அடிப்படையில் மிசா பாரதியிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அவருக்குச் சம்மன் அனுப்பியது. ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பிலான சட்ட விரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கில் மிசா பாரதி மற்றும் அவரது கணவர் சைலேஷ் குமாருக்கு உள்ள தொடர்பு குறித்து அவர்களிடம் விசாரிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள மத்திய அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு நேற்று காலை மிசா பாரதி வந்தார். விசாரணை அதிகாரி முன்பு ஆஜரான அவரிடம் மிஷாலி பிரிண்டர்ஸ் மற்றும் பேக்கர்ஸ் நிறுவனத்தில் இயக்குநர்களாக பதவி வகிப்பது தொடர்பாகவும் மற்றும் அவரது மற்ற நிதி பரிவர்த்தனைகள் தொடர்பாகவும் கேள்வி கேட்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே கைது செய்யப்பட்டவர்களுக்கு உள்ள தொடர்பு குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் அவரது கணவரான சைலேஷ் குமாரும் விரைவில் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என கூறப்படுகிறது.
இந்நிலையில் போலி நிறுவனங்களைப் பயன்படுத்தி பல கோடி ரூபாயை சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்தது தொடர்பாக சுரேந்திர குமார் ஜெயின், வீரேந்திரா ஜெயின் என்ற இரு சகோதரர்கள் மற்றும் சிலரிடம் அமலாக்கத் துறை ஏற்கெனவே விசாரித்தது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் ஜெயின் சகோதரர்கள் இருவரையும் அமலாக்கத்துறை ஏற்கெனவே கைது செய்துள்ளது.
விசாரணையில் ஜெயின் சகோதரர்களுக்கு சொந்தமான ஒரு நிறுவனத்துடன் மிசா பாரதி தம்பதியரின் மிஷாலி நிறுவனத்துடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மிஷாலி நிறுவனத்தின் 1,20,000 பங்குகள், கடந்த 2007-08-ம் ஆண்டில் ஜெயின் சகோதரர்களின் 4 போலி நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டது. ஒரு பங்கின் மதிப்பு ரூ.100 என்ற அடிப்படையில் இப்பங்குகள் மாற்றப்பட்டன. பிறகு இதே பங்குகள் ஒரு பங்கின் மதிப்பு ரூ.10 என்ற அடிப்படையில் மிசா பாரதி பெயருக்கு மாற்றப்பட்டதை அமலாக்கத்துறை கண்டறிந்துள்ளது.
மிசா பாரதியுடன் தொடர்புடைய ராஜேஷ் அகர்வால் என்ற பட்டயக் கணக்காளரையும் அமலாக்கத் துறை ஏற்கெனவே கைது செய் துள்ளது. சுமார் ரூ.60 லட்சம் கறுப்புப் பணத்தை முறைகேடாக மிஷாலி நிறுவன கணக்கில் சேர்க்க இவர் உதவியதாக அமலாக் கத்துறை தரப்பில் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.