

அரசு மருத்துவமனைகளில் உயிர்காப்பு அறுவை சிகிச்சைகளுக்காக நோயாளிகள் காத்திருப்புப் பட்டியலில் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் அவர்களுக்கு அரசு செலவில் இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
சனிக்கிழமையன்று மருத்துவ திட்டம் ஒன்றை அறிமுகம் செய்த முதல்வர் கேஜ்ரிவால், அரசு மருத்துவமனையில் அறுவைசிகிச்சைக்கு தேதி கிடைக்காத நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் அரசு செலவில் அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவித்தார்.
“நோயாளிகளின் பொருளாதார தகுதியைப் பார்க்காமல் சிறந்த ஆரோக்கிய வசதிகள் செய்து தரவே இந்த ஏற்பாடு” என்றார் கேஜ்ரிவால்.
டெல்லி, குர்கவான், நொய்டா, பரிதாபாத் ஆகிய இடங்களில் இத்திட்டத்திற்காக 48 தனியார் மருத்துவமனைகளை டெல்லி அரசு இலவச சிகிச்சைக்கு அடையாளம் கண்டுள்ளது. 24 அரசு மருத்துவமனைகளில் அறுவைசிகிச்சைக்குத் தேதி கிடைக்காத நோயாளிகள் இந்த தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம்.
இதற்காக 52 உயிர்காப்பு அறுவைசிகிச்சைகளை டெல்லி அரசு அடையாளப்படுத்தியுள்ளது. இதில் பைபாஸ், கிட்னி, தைராய்டு உள்ளிட்ட நோய்கள் அடங்கும்.
மாநில அரசு ஒன்று நோயாளிகளுக்காக இத்தகைய திட்டத்தை அறிவிப்பது இதுவே முதல் முறை.
“இன்றைய தினம் நோயைப் பற்றி கவலையை விட அதன் சிகிச்சைக்கு என்ன செய்யப்போகிறோம் என்பதே மக்களின் கவலையாக இருந்து வருகிறது. இப்போது மக்கள் கவலைப்பட வேண்டியதில்லை. நோயாளிகளுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சையை டெல்லி அரசு உறுதி செய்துள்ளது” என்றார் முதல்வர் கேஜ்ரிவால்.