நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு தேவை: மாநிலங்களவையில் அதிமுக, திமுக எம்பி.க்கள் கூட்டாக குரல்

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு தேவை: மாநிலங்களவையில் அதிமுக, திமுக எம்பி.க்கள் கூட்டாக குரல்
Updated on
1 min read

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரி மாநிலங்களவையில் இன்று (புதன்கிழமை) அதிமுக, திமுக எம்பி.க்கள் கூட்டாக குரல் எழுப்பினர்.

மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக நாடு முழுவதும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (NEET) நடைபெற்றது. இத்தேர்வில் தமிழகத்திலிருந்து வெகு குறைந்தளவிலான மாணவர்களே தேர்வு பெற்றனர். அவர்களும் பெரிய அளவில் மதிப்பெண் எடுக்கவில்லை. சொற்பமான அளவிலான மாணவர்களே நல்ல மதிப்பெண் எடுத்திருந்தனர்.

இந்நிலையில், நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரி மாநிலங்களவையில் இன்று (புதன்கிழமை) அதிமுக திமுக எம்பி.க்கள் கூட்டாக குரல் எழுப்பினர்.

மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது அதிமுக எம்.பி. ஏ.கே.செல்வராஜ், திமுக எம்.பி., கனிமொழி ஆகியோர் இணைந்து தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்குமாறு கோரினர்.

ஏ.கே.செல்வராஜ் பேசும்போது, "நீட் தேர்வில் 90% கேள்விகள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் கேட்கப்பட்டிருந்தன ஆனால் தமிழக மாணவர்கள் பெரும்பாலானோர் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்து தேர்வை எதிர்கொண்டனர். ஆகையால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்" என்றார்.

திமுக எம்.பி. கனிமொழி பேசும்போது, "நீட் தேர்விலிருந்து முழுமையாக தமிழகத்துக்கு விலக்குக் கோரி மாநில அரசு அவசரச் சட்ட மசோதா நிறைவேற்றியுள்ளது. அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். மாநிலத்தில் உள்ள மருத்துவக்கல்லூரிகளின் கட்டமைப்பை மாநில அரசே மேம்படுத்துகிறது. அந்த வகையில் மருத்துவக் கல்லூரிகளில் தமிழக மாணவர்கள் இடம்கோர உரிமை இருக்கிறது" என்றார்.

அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் பேசும்போது, "நீட் தேர்வால் மருத்துவக் கனவு தகர்ந்தமையால் தமிழகத்தில் பல மாணவர்கள் தற்கொலை முடிவு எடுக்கும் சூழல் நிலவுகிறது. தென் மாநிலங்களில் உள்ள மாணவர்களுக்கே கடினமான கேள்வித்தாள் வழங்கப்பட்டுள்ளது" எனக் கூறினார்.

இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. டி.கே.ரங்கராஜன், "மாநில அரசின் தீர்மானத்தை ஏற்பதில் மத்திய அரசுக்கு இருக்கும் தடை என்ன?" என்று கேள்வி எழுப்பினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜாவும் தமிழக அரசுக்கு ஆதரவாக குரல் எழுப்பினார்.

ஜவடேகர் பதில்:

தமிழக எம்.பி.க்கள் ஒருசேர குரல் எழுப்ப அதற்கு விளக்கமளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், "இவ்விவகாரம் நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது. இதுதொடர்பாக அனைவரிடமும் ஆலோத்திவிட்டோம். இப்பிரச்சினை ஆரம்பநிலை எல்லாம் கடந்துவிட்டது" என்றார்.

அமைச்சரின் பதிலால் அதிருப்தியடைந்த அதிமுக எம்பி.க்கள் அவை நடுவே கூடி கோஷம் எழுப்பினர். எங்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் எனக் கூச்சலிட்டனர். அவர்களுடன் திமுக எம்பி.க்களும் இணைந்து கோஷமிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in