Last Updated : 10 Jul, 2017 08:43 AM

 

Published : 10 Jul 2017 08:43 AM
Last Updated : 10 Jul 2017 08:43 AM

உலகப் பாரம்பரியமிக்க நகரமாக அகமதாபாத் தேர்வு: யுனெஸ்கோ அறிவிப்பு - தலைவர்கள் வாழ்த்து

‘உலகப் பாரம்பரியமிக்க நகர மாக குஜராத்தின் அகமதாபாத் நகரை தேர்வுசெய்து யுனெஸ்கோ அறிவித்துள்ளது.

அகமதாபாத் நகரம் கடந்த 600 ஆண்டுகளுக்கு முன்பு அகமது ஷா என்பவரால் உருவாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இங்குள்ள 26 வகையான பழமைமிகு கலைநயமிக்க கட்டிடங்கள், நூற்றுக்கணக்கான கலையம்சம் மிக்க குடியிருப்புகள் உள்ளிட் டவை தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

சுதந்திரப் போராட்டத்தின் போது அகமதாபாத் நகரில் மகாத்மா காந்தி கடந்த 1915-ம் ஆண்டு முதல் 1930-ம் ஆண்டு வரை வாழ்ந்துள்ளார். அவருடன் தொடர்புடைய பல இடங்களும் ஏராளமாக உள்ளன. இந்த நிலையில் இங்குள்ள புராதன கட்டிடங்களைப் பராமரித்து பாதுகாப்பது தொடர்பான முதல்கட்ட ஆய்வு கடந்த 1984-ம் ஆண்டு நடத்தப்பட்டது.

தொடர்ந்து பாரம்பரியமிக்க நகரங்களின் பட்டியலில் இந்நகரைச் சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் டெல்லி, மும்பை நகரங்களின் வரிசையில் அகமதாபாத்தும் பாரம்பரிய நகரங்களுக்கான போட்டியில் இடம் பெற்றிருந்தது.

இந்நிலையில் உலகப் பாரம்பரியமிக்க புராதன நகரங் களின் பட்டியலில் இந்தியாவில் முதல் நகரமாக அகமதாபாத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமது ட்விட்டர் பக்கத்தில் நேற்று முன்தினம் இரவு யுனெஸ்கோ தெரிவித்தது.

இதையடுத்து பிரதமர் மோடி, குஜராத் முதல்வர் விஜய் ரூபானி மற்றும் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோர் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்தியாவுக்கு மட்டற்ற மகிழ்ச்சி தரும் செய்தி’ எனக் கூறியுள்ளார்.

முதல்வர் விஜய் ரூபானி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘உலகப் பாரம்பரிய நகரங்களின் பட்டியலில் இந்தியாவில் முதல் நகரமாக அகமதாபாத் தேர்வாகி இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக் கிறது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா வெளியிட்ட ட்விட்டர் தகவலில், ‘அகமதாபாத் உலகப் பாரம்பரிய நகரமாகத் தேர்வாகி இருப்பது ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை அளிக் கும் விஷயம்’ எனத் தெரிவித் துள்ளார்.

பாரம்பரியமிக்க நகரங்களின் பட்டியலில் பிரான்ஸின் பாரிஸ், ஆஸ்திரியாவின் வியன்னா, எகிப்தின் கெய்ரோ, பெல்ஜியத் தின் பிரஸ்ஸல்ஸ், இத்தாலியின் ரோம், ஸ்காட்லாந்தின் எடின் பரோ ஆகிய நகரங்களின் வரிசை யில் அகமதாபாத்தும் இடம் பிடித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x