மேற்கு வங்கத்தில் முகநூலில் வெளியான கருத்தால் சர்ச்சை: படூரியா உட்பட கலவரம் ஏற்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு

மேற்கு வங்கத்தில் முகநூலில் வெளியான கருத்தால் சர்ச்சை: படூரியா உட்பட கலவரம் ஏற்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு
Updated on
1 min read

மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் கலவரம் பாதித்த பகுதிகளில் 144 தடை உத்தரவு நேற்றும் அமலில் இருந்தது.

ஒரு மத்தினரின் புனிதத் தலம் குறித்து ஆட்சேபணைக்குரிய கருத்து முகநூலில் பகிரப்பட்டதை தொடர்ந்து, வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் படூரியா மற்றும் அதையொட்டிய பகுதிகளில் கடந்த திங்கள்கிழமை இரவு கலவரம் மூண்டது. இதில் பல கடைகளுக்கு தீ வைக்கப்பட்டது. வீடுகள் சூறையாடாப்பட்டன. படூரியா காவல் நிலையம் தாக்கப்பட்டு, தீ வைக்கப்பட்டது. மறுநாளும் தொடர்ந்த போராட்டம் மற்றும் வன்முறையில் அரசு மற்றும் போலீஸ் வாகனங்கள் கொளுத்தப்பட்டன.

இதையடுத்து பிஎஸ்எப் மற்றும் துணை ராணுவப் படை வீரர்கள் 800 பேர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர். படூரியா, பசீர்ஹத் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நேற்று முன்தினம் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு நேற்றும் நீட்டிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் இணைய தள சேவை நேற்றும் முடக்கப்பட்டது.

இந்நிலையில் பசீர்ஹத் நகரில் நேற்று ஒரு கும்பல் திடீரென வன்முறையில் ஈடுபட்டது. இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் கும்பலை கலைத்தனர். பிற இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் ஏதுமில்லை.

கலவரம் பாதித்த பகுதிகளுக்கு மத்திய அரசு 800 வீரர்களை அனுப்பியுள்ள நிலையில், முதலில் அனுப்பிய 400 வீரர்களே போதுமானது, கூடுதல் வீரர்கள் தேவையில்லை என மத்திய உள்துறை அமைச்சகத்திடம் முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

இந்தக் கலவரம் தொடர்பாக விரிவான அறிக்கை அளிக்குமாறு மேற்கு வங்க அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கெனவே கோரியுள்ளது.

பிரகாஷ் காரத் கண்டனம்

இந்நிலையில் மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பிரகாஷ் காரத் நேற்று கூறும்போது, “பசீர்ஹத் தாலுகாவில் கடந்த 4 நாட்களாக மதக் கலவரம் நடக்கிறது. மாநில அரசால் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. மதவாத அரசியல் காரணமாக திரிணமூல் காங்கிரஸும் பாஜகவும் எதிரெதிராக செயல்படுகின்றன. அங்கு முதலில் வன்முறை கட்டுப்படுத்தப்பட்டு, இயல்புநிலை திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதைய சூழலைக் கொண்டு அரசியல் செய்வதற்கு இது நேரமல்ல” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in