

இந்தியா, பாகிஸ்தான் இடையே கடந்த 2008, மே 21-ல் தூதரக அனுமதி உடன்பாடு கையெழுத் தானது. அதன் அடிப்படையில் ஆண்டுக்கு இருமுறை (ஜனவரி, 1 மற்றும் ஜூலை 1) பரஸ்பரம் தங்கள் நாட்டு சிறையில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை இரு நாடுகளும் பரிமாறி வருகின்றன.
அந்த வகையில் நேற்று இரு நாடு களும் பரஸ்பரம் சிறை கைதிகளின் பட்டியலை பரிமாறிக் கொண்டன. பாகிஸ்தான் சார்பில் இந்திய தூதர் கவுதம் பம்பாவாலேவிடம் வழங்கப்பட்ட அந்தப் பட்டியலில் 494 மீனவர்கள் உட்பட 546 இந்தியர்கள் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக குறிப் பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து இந்திய வெளியறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘ஹமீது நேஹல் அன்சாரி, குல்பூஷண் ஜாதவ் உட்பட பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து இந்தியர்களையும், இந்திய தூதரக அதிகாரிகள் சந்தித்து பேச அனுமதி வழங்க வேண்டும் என மீண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் உளவு பார்க்க வந்ததாக குற்றம்சாட்டி, கடந்த ஏப்ரல் மாதம் குல்பூஷண் ஜாதவுக்கு அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதையடுத்து நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த நீதிமன்றம் குல்பூஷண் ஜாதவின் மரண தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது.