

திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரூ.8 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித்தர உத்தரவிடக் கோரி உச்ச நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்தி வருகின்றனர். இதனிடையே ஏராளமான பக்தர்கள், மத்திய அரசால் செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை ஏழுமலையானுக்கு காணிக்கை செலுத்தி வருகின்றனர்.
இதன்மூலம் இதுவரை ரூ.8.29 கோடி மதிப்பிலான செல்லாத நோட்டுகள் குவிந்துள்ளன.
இந்த நோட்டுகளை மாற்ற அவகாசம் வழங்க வேண்டுமென தேவஸ்தானம் பல முறை ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதியும் பலன் இல்லை. இந்நிலையில், திருப்பதியைச் சேர்ந்த நிருபர் வி.வி. ரமணமூர்த்தி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கையாக வழங்கிய பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித் தர ரிசர்வ் வங்கி மறுப்பதால் பக்தர்களின் மனம் புண்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ரூ.8.29 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுத்தால், பக்தர்களுக்கு பல வசதிகளை செய்து தர முடியும். எனவே, திருப்பதி தேவஸ்தானத்தின் கையிருப்பில் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித் தருமாறு ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், இதுகுறித்து 4 வாரத்தில் பதில் அளிக்குமாறு ரிசர்வ் வங்கிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.