வங்கி கணக்கில் பணம் இல்லாமல் காசோலை திரும்பி வந்தால் கடும் தண்டனை விதிக்கப்பட வேண்டும்: மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து டெல்லி நீதிமன்றம் கருத்து
டெல்லியைச் சேர்ந்த பி.சி.சர்மா என்பவரிடம், ஒருவர் கடந்த செப்டம்பர் மாதம் 2002-ம் ஆண்டு ரூ.10 லட்சம் கடன் வாங்கி உள்ளார். (அவரது பெயர் வெளியிடப் படவில்லை.) அப்போது வட்டி யுடன் அசலை திரும்ப தருவதாக அவர் உறுதிமொழி அளித்துள்ளார். அதன்பிறகு கடந்த 2010-ம் ஆண்டு ரூ.10 லட்சத்துக்கான காசோலையை சர்மாவிடம் அவர் கொடுத்துள்ளார்.
ஆனால், வங்கி கணக்கில் பணம் இல்லை என்று காசோலை திரும்ப வந்துவிட்டது. கடன் வாங்கியவருக்கு சட்டரீதியாக நோட்டீஸ் அனுப்பினார் சர்மா. அதன்பிறகும் பணம் வராததால், நீதிமன்றத்தில் சர்மா காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கடன் வாங்கியவருக்கு 8 மாத சிறை தண்டனை விதித்தது. அத்துடன் மனுதாரருக்கு ரூ.20 லட்சத்தை வழங்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
இதை எதிர்த்து டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் கடன் வாங்கியவர் மேல்முறையீடு செய்தார். அவர் தனது மனுவில், ‘புகார் தெரிவிப்பதற்கு முன்பே பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டேன்’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்து நீதிபதி புலஸ்தியா பர்மாச்சலா அளித்த தீர்ப்பில் கூறியதாவது:
பணமாக மாற்றத்தக்க காசோலை போன்றவை ஒவ்வொரு வருடைய அன்றாட வாழ்வில் ஓர் அங்கமாக இருக்கின்றன. எனவே காசோலை போன்றவற்றின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய, காசோலை மோசடி வழக்குகளில் கடும் தண்டனை விதிக்கப்பட வேண்டும். இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் எந்தக் குறை யும் இருப்பதாகத் தெரியவில்லை. மேலும், பணத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டதற்கான ஆதாரங் கள் எதுவும் சமர்ப்பிக்கப்பட வில்லை. எனவே, மேல்முறையீட்டு மனுவில் தகுதி இல்லை. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
விசாரணை நீதிமன்றம் அளித்த 8 மாத சிறை தண்டனை மற்றும் ரூ.20 லட்சம் செலுத்த வேண்டும் என்ற தீர்ப்பு சரியானதுதான். கடந்த 2010-ம் ஆண்டு ரூ.10 லட்சத்துக்கு காசோலை வழங்கப்பட்டுள்ளது. அதை 2 மடங்காக திரும்பி செலுத்த விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2010-ம் ஆண்டில் இருந்து 7 ஆண்டுகள் ஆகியுள்ளது. எனவே, அதற்கு நிவாரணமாக ரூ.20 லட்சம் தரவேண்டும் என்று அளித்த தீர்ப்பு நியாயமானதுதான். இவ்வாறு நீதிபதி புலஸ்தியா பர்மாச்சலா தீர்ப்பளித்தார்.
