Published : 01 Jul 2017 10:03 AM
Last Updated : 01 Jul 2017 10:03 AM

நெடுஞ்சாலைகளில் விபத்துகளை தடுக்க பஸ், லாரி ஓட்டுநர்களுக்கு இரவில் டீ, தண்ணீர்: ஆந்திர அரசு நூதன முயற்சி

நெடுஞ்சாலைகளில் விபத்துகளை தடுக்க ஆந்திர அரசு நூதன முயற்சியை மேற்கொண்டுள்ளது. முதல்கட்டமாக சென்னை - கொல் கத்தா தேசிய நெடுஞ்சாலையில் லாரி, பஸ் ஓட்டுநர்களுக்கு முகம் கழுவ தண்ணீரும், குடிக்க டீ-யும் வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை எண் 16-ல், விபத்துகள் ஏற்படும் இடங்களில் இரவு நேரங்களில் போலீஸார் லாரி, பஸ்களை நிறுத்தி, ஓட்டுநர் களிடம் அன்பாகப் பேசி, முகம் கழுவ தண்ணீரை வழங்குகின்றனர்.

அதன் பின்னர் சூடாக குடிக்க டீ தருகின்றனர். சிறிது நேரம் உற்சாகமாக பேசி அவர்களுக்கு சாலை போக்குவரத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், வாகனத்தை ஓட்டும்போது உங்களது குடும்பத்தாரை நினைத்து ஓட்டுமாறும் அன்புடன் எச்சரிக்கையும் செய்து வழி அனுப்பி வைக்கின்றனர்.

இந்த நூதன திட்டம் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது. மேலும் ஆந்திர அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தொலைதூரம் செல்லும் அரசு பஸ் ஓட்டுநர்களுக்கு பிளாஸ்க்கில் டீ அல்லது காபி நிரப்பி அனுப்பும் திட்டமும் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இதன் செயல்பாடுகள் குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, போக்குவரத்துத் துறை அமைச்சர், டிஜிபி மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிகிறார்.

இத்திட்டத்தால் குறிப்பாக சென்னை - விஜயவாடா வரை விபத்துகள் குறைந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். இரவு ரோந்து பணியில் உள்ள போலீஸார், அடிக்கடி விபத்து நடைபெறும் இடங்களில் காத்திருந்து அவ்வழியே செல்லும் லாரி, பஸ்களை நிறுத்தி டீ, தண்ணீர் வழங்குகின்றனர்.

இந்த முயற்சி வெற்றி அடைந்தால் மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய சாலைகளில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று கூறப்படுகிறது. லாரி, பஸ் ஓட்டுநர்கள் மத்தியில் இந்தத் திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக குண்டூர் டிஎஸ்பி கமலாகர் ராவ் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x