

அரசியல் மோதல்கள் அதிகம் இருந்த கேரள காவல் நிலையம் இன்று இசை, நூலக வசதிகள், மரக்கன்று வழங்குவது என்று புதுமை படைத்து வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பு கன்னூர் மாவட்டத்தில் உள்ள சக்கரக்கல் காவல் நிலையம் அரசியல் மோதல்களால் அதிகம் பாதிக்கப்பட்டது. இதனால் இங்கு பணிபுரியும் அதிகாரிகள் காவல் நிலையத்தை மக்களுக்கு உகந்த இடமாக மாற்ற முடிவெடுத்தனர்.
பாரம்பரிய இசை அங்கே ஒலிக்க விடப்பட்டது. இதன்மூலம் அழுத்தத்துடன் காவல் நிலையம் வந்த பொதுமக்கள் சற்றே அமைதியடைந்தனர்.
இதன் அடுத்தகட்டமாக மாவட்ட தலைமை காவல் அதிகாரி சிவா விக்ரம், புரொஜெக்டருடன் கூடிய ஆடியோ சிஸ்டத்தை ஜூலை 8-ம் தேதி காவல் நிலையத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
அத்துடன் கொடையாளிகளின் உதவியுடன் நூலகமும் நடத்தப்பட்டு வருகிறது. தேவைப்படும் மக்களுக்கு புத்தகங்கள் வாடகைக்கு அளிக்கப்படுகின்றன.
இதுகுறித்துப் பேசிய காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிஜூ, ''சில மாதங்களுக்கு முன் அரசியல் மோதல்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வந்து, அனைத்துக் கட்சிகளும் சமாதான நடவடிக்கைகளில் ஈடுபட்டன. அதன் பிறகே எங்களுக்கும் இந்த யோசனை வந்தது.
இங்குள்ள புரொஜெக்டரை, சாலை விதிமுறைகள் மற்றும் விபத்துகள் தொடர்பான வீடியோக்களை ஒளிபரப்பப் பயன்படுத்துகிறோம். காவல் நிலையத்தில் பார்வையாளர்களுக்கெனத் தனிப்பகுதி இருக்கிறது. நூலகத்தில் சுமார் 1,000 புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. புத்தகங்களை எடுத்துச் செல்பவர்கள் புத்தகம் குறித்த விரிவான விளக்கத்துடன் ஒரு வாரத்துக்குள் புத்தகத்தைத் திருப்பி அளிக்க வேண்டும்.
வாசிப்பில் ஆர்வம் இல்லாதவர்களுக்கு காய்கறி விதைகளைத் தருகிறோம். ஆனால் அவர்கள் அதை நட்டு வளர்ந்த செடிகளைப் புகைப்படம் எடுத்து உதவி ஆய்வாளரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்ப வேண்டும்'' என்கிறார்.
புதுமை படைக்கும் இந்த காவல் நிலையத்துக்கு பொதுமக்களின் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.