Published : 16 Feb 2014 12:40 PM
Last Updated : 16 Feb 2014 12:40 PM

ரிலையன்ஸ் விவகாரம்: மோடி மெளனம் கலைக்க கேஜ்ரிவால் வலியுறுத்தல்

ரிலையன்ஸ் நிறுவனத்துக்காக இயற்கை எரிவாயு விலை அதிகரிக்கப்பட்ட விவகாரத்தில், பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தனது மெளனத்தைக் கலைக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லி முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த மறுநாள், அரவிந்த் கேஜ்ரிவால் 'தி இந்து' (ஆங்கிலம்) நாளிதழுக்கு அளித்த பேட்டியில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி 5 இடங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே போதும் என்றும், அதன் மூலம் 'மதவாத, ஊழல் மற்றும் குற்றப் பின்னணி' முதலியவற்றின் பிரதிநிதிகளாக இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலையை கடினமாக்குவது சாத்தியமாகிவிடும் என்றும் கூறியுள்ளார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்காக எரிவாயு விலை அதிகரிக்கப்பட்ட விவகாரத்தில் பாஜக அமைதி காப்பது குறித்து கேள்வி எழுப்பிய அவர், இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை பகிரங்கமாக வெளியிட பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தயாரா என்று சவால் விடுத்தார்.

கடந்த ஆண்டுகளில் முகேஷ் அம்பானிக்கும், அதானி குழுமத்துக்கும் குஜராத் முதல்வர் மோடி துணைநிற்பதாகக் கூறிய அவர், இது தொடர்பாக மோடிக்கு அடுத்த இரண்டு, மூன்று நாட்களில் கடிதம் எழுதவுள்ளதாக தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை ரிலையன்ஸ் தலைவர் அம்பானிதான் ஆள்வதாக அரவிந்த் கேஜ்ரிவால் மீண்டும் குற்றம்சாட்டினார்.

பாஜக ஆட்சிக்கு வந்தால், மோடியின் கீழ் இந்தியாவின் எதிர்காலம் என்னவாகும் என்பது குறித்து கவலையாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இந்த விவகாரம் பற்றி நாட்டு மக்கள் தீவிர விவாதத்தில் ஈடுபட வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை இம்மாதம் 23-ல் தொடங்கும் கேஜ்ரிவால், மோடிக்கு எதிராக களமிறங்கும் திட்டம் குறித்து எழும் சர்ச்சைகளில் உண்மையில்லை எனவும், தற்போது டெல்லி மக்களின் நலனுக்காக செயல்படுவது என்று தாம் உறுதிபூண்டுள்ளதாகவும் கூறினார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x