

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்துக்கு மீண்டும் புயல் அபாயம் உள்ளதாக நேற்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த மாதம் வங்கக் கடலில் உருவான ஹுத் ஹுத் புயல் தாக்கியதால் கடலோர ஆந்திர மாநிலத்தில் பலத்த சேதம் ஏற்பட்டது. குறிப்பாக தொழிற் சாலைநகரமான விசாகப்பட்டினம் சூறா வளியால் சூறையாடப்பட்டது. இதில் 50 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக் கானோர் வீடுகளை இழந்தனர். கோடிக் கணக்கில் பயிர்கள் நாசமடைந்தன. சாலை கள், மின்சார கட்டமைப்புகள், ரயில், பஸ், விமான நிலையங்கள் சேதமடைந்தன.
இதன் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மீண்டும் வங்க கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து உள்ளதால், ஆந்திராவின் கடலோர பகுதிகளில் மணிக்கு 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி வருகிறது. கடலில் அலைகள் கொந்தளிப்பதால் அனைத்து துறைமுகங்களிலும் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கொடி ஏற்றப்பட்டுள்ளது.
மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். இதனால் கடலோர ஆந்திரமாவட்டங்களான விசாகப்பட்டினம், விஜய நகரம், ஸ்ரீகாகுளம் மற்றும் தெலங்கானாவில் உள்ள சில மாவட்டங்களில் புயலின் பாதிப்பு இருக்கும் என விசாகப்பட்டின வானிலை மையம் தெரிவித்துள்ளது.