

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டனி சார்பில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்த், ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் நேற்று ஆதரவு திரட்டினார்.
வரும் 17-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்க்கட்சிகள் சார்பில் மீரா குமாரும் போட்டியிடுகின்றனர். இதையடுத்து இருவரும் நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டி வருகின்றனர்.
அந்த வகையில், பாஜக வேட்பாளரான ராம்நாத் கோவிந்த், நேற்று தெலங்கானா மாநில தலைநகரமான ஹைதராபாத்துக்கு சென்றார். இவருடன் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவும் வந்திருந்தார்.
ஹைதராபாத்தில் உள்ள ‘ஜல விஹார்’ அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியதாவது:
தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியினர் தொடக்கம் முதலே எனக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். இது சந்தோஷமாக உள்ளது. எனக்கு வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு அளித்தமைக்கும், எனக்கு ஹிந்தி தெரியும் என்பதால் முதல்வர் கே.சந்திரசேகர ராவ் ஹிந்தியிலேயே பேசியதற்கும் அவருக்கு எனது பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நம் நாடு உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடாகும். இதில் பல உத்தமர்கள் குடியரசுத் தலைவராக பதவி வகித்துள்ளனர். அந்த வகையில் நானும் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் சிறப்பாக பணியாற்றுவேன். கட்சி பேதமின்றி கவுரமான அந்த பதவியை பேணி காப்பேன். இவ்வாறு ராம்நாத் கோவிந்த் பேசினார்.
பின்னர் அவர் தெலங்கானா ராஷ்டிர சமிதி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்களிடம் ஆதரவு திரட்டினார். இதில் தெலங்கானா மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவ், மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து ராம்நாத் கோவிந்த், விமானம் மூலம் விஜயவாடா சென்றார். அங்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினார்.