

ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் அமர்நாத் யாத்ரீகர்கள் பயணித்த பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் பலியாகினர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஜூன் 2-ம் தேதியன்று அமர்நாத் புனித யாத்திரை தொடங்கியது. அனந்தநாக் மாவட்டம் பாஹல்கம், கந்தர்பால் மாவட்டம் பால்டல் என இரண்டு மார்க்கங்களில் யாத்ரீகர்கள் அமர்நாத்தை அடைந்து பனி லிங்கத்தை தரிசித்து வருகின்றனர். ஆகஸ்ட் 7-ம் தேதிவரை இந்த யாத்திரை நடைபெறுகிறது.
இந்நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) ரம்பான் மாவட்டம் அருகே ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் அமர்நாத் யாத்ரீகர்கள் பயணித்த வாகனம் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வாகனத்தில் இருந்தவர்களில் 16 பேர் பலியாகினர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்ந்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அமர்நாத் யாத்ரீகர்கள் மீது நடத்தப்பட்ட தீவிரவாதிகள் தாக்குதலில் 8 பேர் பலியாகினர் என்பது கவனிக்கத்தக்கது.
பிரதமர் மோடி இரங்கல்:
அமர்நாத் சாலை விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அமர்நாத் யாத்ரீகர்கள் விபத்தில் பலியான சம்பவத்தை கேள்விப்பட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.