

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மாநிலத் தலைநகர் அமைப்பது தொடர்பாக வரும் 24-ம் தேதி அமைச்சர்கள், எம்.பிக்கள் அடங்கிய குழுவினருடன் ஜப்பான் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
தற்போதைய ஆந்திர மாநிலத்துக்கு 10 ஆண்டுகள் வரை ஹைதராபாத் பொது தலை நகரமாக விளங்கும். எனினும், நிரந்தர தலை நகர் அமைக்க முதல்வர் சந்திரபாபு நாயுடு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். விஜயவாடா-குண்டூர் இடையே தலைநகர் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டில்லியை போன்று அழகிய தலைநகரம் அமைக்க சந்திரபாபு நாயுடு முடிவு செய்துள்ளார். இதற்காக மத்திய அரசிடம் நிதி உதவியும் கோரி உள்ளார். மேலும் மாநில மக்கள் ஒவ்வொருவரும் இதற்காக தாராளமாக நிதி உதவி செய்ய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் அமைச்சர்கள், எம்.பிக்கள், ஐ.ஏ. எஸ் அதிகாரிகள் குழுவுடன் சிங்கப்பூர் பயணம் மேற்கொண்டார். அங்கு நகர வளர்ச்சி பணிகள், சாலைகள், தொழிற்சாலைகள், கால்வாய்கள், குடிநீர் வசதி, கட்டிட அமைப்புகள் போன்ற வசதிகளை ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து வரும் 24-ம் தேதி தனது குழுவினருடன் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஜப்பான் செல்ல உள்ளார். இக்குழு 27-ம் தேதி வரை ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு மேற்கொள்ள உள்ளது. ஆந்திர தலைநகர் கட்டுமானத்தில் உதவ ஜப்பான் அரசு முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.