

முல்லைப் பெரியாறு அணை வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க, உச்ச நீதிமன்றம் 3 வாரங்கள் காலஅவகாசம் அளித்துள்ளது.
தமிழக அரசு சார்பில் கடந்த மே 4-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், முல்லைப் பெரியாறு அணையில் தமிழக அரசு பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள கேரளா அனுமதி மறுக்கிறது என்று குற்றம் சாட்டப்பட்டது.
இதுகுறித்து கேரள அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு அனுமதி வழங்க முடியாது. அணையை பராமரிக்கும் பணியை தமிழக அரசு மேற்கொள்ளக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி சந்திரசூட் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கேரள அரசின் மனு குறித்து பதில் அளிக்க தமிழகம் சார்பில் அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் 3 வாரங்களில் பதில் அளிக்க காலஅவகாசம் அளித்தனர்.