

நடிகை பாவனா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் திலீப் ஆதாரங்களை சேகரிப்பதற்காக திருச்சூருக்கு அழைத்து வரப்பட்டார்.
மலையாள நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல நடிகர் திலீப்பை இவ்வழக்கு தொடர்பாக ஆதாரங்களை திரட்டுவதற்காக இன்று (வியாழக்கிழமை) கேரள போலீஸார் திருச்சூருக்கு அழைத்து வந்தனர்.
இது குறித்து போலீஸார் தரப்பில், "பாவனா கடத்தல் தொடர்பாக ஆதாரம் திரட்டுவதற்காக, நடிகர் திலீப் திருச்சூரில் உள்ள ஜாய்ஸ் ஓட்டல், தி கருடா ஓட்டல், கினாடிங்கல் டென்னிஸ் அகாடமி ஆகிய இடங்களுக்கு அழைத்து வரப்பட்டார்.
முதலில் ஜாய்ஸ் ஒட்டலுக்கு திலீப்பை அழைத்துச் சென்றோம். அங்குதான் பாவனா கடத்தல் வழக்கில் முதலில் கைது செய்யப்பட்ட குற்றவாளியான சுனிலை திலீப் சந்தித்துப் பேசி உள்ளார். சுனில் அங்கு வந்து திலீப்பை சந்தித்து சென்றதற்கான பதிவுகள் அந்த ஓட்டலிலிருந்து பெறப்பட்டுள்ளது.
இதனையடுத்து திலீப் கருடா ஒட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்குதான் படப்பிடிப்பு ஒன்றுக்காக திலீப் சுமார் 20 நாட்கள் தங்கி இருந்துள்ளார். அங்கு திலீப் தங்கியிருந்தபோது அங்குள்ள ஓட்டல் பணியாளர்கள் அவருடன் செல்ஃபி எடுத்துள்ளனர். அந்த புகைப்படங்களில் சுனிலும் இருப்பது தெரிய வந்துள்ளது.
மேலும் ஓட்டல் பணியாளர்கள் திலீபும், சுனிலும் பேசியுள்ளதை பார்த்ததாக சாட்சியம் அளித்துள்ளனர்.
இதனையடுத்து , கினாடிங்கல் டென்னிஸ் அகாடமிக்கு திலீப்பை அழைத்துச் சென்று அங்கு ஆதாரங்கள் திரட்டப்பட்டன" என்று கூறப்பட்டுள்ளது.